மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதற்கட்டமாக மதுரை விமான நிலையத்தில் ஆய்வு நடத்தினார். கொரோனா மற்றும் குரங்கம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது? என கண்காணித்தும், சுகாதார பணியாளர்களிடம் பணிகள் சம்பந்தமாக கேட்டறிந்தார்.

மேலும் விமான பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யக்கூடிய கருவியையும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் செல்லும் வழியில் வாடிப்பட்டி வட்டம் அய்யங்கோட்டை அரசு சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது சுகாதார நிலைய நோயாளிகள் அறை, மருத்துவமனை வளாகம், உள்ளிட்ட பகுதிகளை சோதனையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரிகள் வருகை குறித்து கேட்டறிந்தார். அப்போது, மருத்துவமனை மருத்துவ அதிகாரி ரூபேஷ்குமார் 2 மணி நேரம் பணியில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவர் 2 மணி நேரம் தாமதமாக வருவதாக  கூறியதாக மருத்துவமனையில் இருந்தவர்கள் கூறினர். இதனால் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட பொது சுகாதாரத்துறை இயக்குநருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் உத்தரவிட்டார். பணி நேரத்தில் மருத்துவர் பூபேஸ்குமார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இல்லாததால் அமைச்சர் இத்தகைய நடவடிக்கை எடுத்திருக்கிறார். பின்னர் அப்பகுதி மக்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அமைச்சரின் இந்த திடீர் ஆய்வு அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.