திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோலாகலமாக நடந்து வரும் ஆடிக்கிருத்திகை திருவிழாவில், நேற்று நடைபெற்ற ஆடி பரணி விழாவில் காவடிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான, சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நேற்று முன்தினம் ஆடிக்கிருத்திகை திருவிழா, 3 நாள் தெப்பத் திருவிழா, ஆடி அஸ்வினி விழாவோடு தொடங்கியது.

ஆடி பரணி விழாவை முன்னிட்டு, நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங் காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொண்டு, பால் காவடி, புஷ்பக் காவடி உள்ளிட்ட காவடிகளுடன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், திருத்தணியில், காஞ்சிபுரம் சரக டிஐஜி தலைமையில், 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருத்தணி- சித்தூர் சாலையில் முருகூர், சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பட்டாபிராமபுரம், அரக்கோணம் சாலையில் பேருந்து பணிமனை பகுதிகளில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆடிக்கிருத்திகை திருவிழாவின் முக்கிய விழாவான கிருத்திகை திருவிழா, முதல் நாள் தெப்பத் திருவிழா இன்று (23-ம் தேதி) நடக்கிறது.