கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கை முடிக்கக் கூடாது என ஓபிஎஸ் மற்றும் சண்முகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி சண்முகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தடை விதிக்க மறுத்து விட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் அமர்வு, “ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என்ற நிபந்தனையுடன், பொதுக்குழுவை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டனர்”.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீறி கட்சியின் நிரந்தர அவை தலைவராக தமிழ் மகன் உசேனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக் குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டதாக கூறி எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு எதிராக சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதேபோல ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி கூடுதல் மனுவும் தாக்கல் செய்திருந்தார்.

இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் சாதகமான முடிவை பெரும் பட்சத்தில் சண்முகம் தரப்பில் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்ற அனுமதியுடன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு, ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவுக்கு தடை கூறிய கூடுதல் மனுவையும் நிராகரித்தது.

இந்நிலையில், சண்முகம் தாக்கல் செய்த பிரதான மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைக்க கூடாது என்று சண்முகம் தரப்பிலும், ஓபிஎஸ் தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சண்முகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.