உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னர் சேலம் மாநகராட்சியில் உள்ள 60 கோட்டங்களை 72 கோட்டங்களாக மறுவரையறைப்படுத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டல அலுவலகங்களில் 60 கோட்டங்கள் உள்ளன. இந்த நான்கு மண்டலங்களிலும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், 7.20 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

சேலம் மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே, உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, சேலம் மாநகராட்சியில் உள்ள 60 கோட்டங்களை 72 கோட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக கோட்டங்கள் மறுதிட்டவரையறை செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நான்கு மண்டலங்களில் உள்ள 60 கோட்டங்களில் வசிக்கும் வாக்காளர்கள் எண்ணிக்கையில் தலா ஒரு கோட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மிகாமல் இருக்கும் வரையில் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக 72 கோட்டங்கள் மறுவரையறை செய்த திட்ட அறிக்கையை சென்னை நகராட்சிகள் நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் ஒப்புதல் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 கோட்டங்களை 72 கோட்டமாக பிரிப்பதன் மூலம் கூடுதல் கவுன்சிலர்கள் போட்டியிட வாய்ப்பு ஏற்படும் என்பதால் அரசியல் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.