நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் நடத்தி வரும் கல்வி விருது வழங்கும் விழா 10 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. இதுவரை 1,150 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு சென்னையில் உள்ள நீலாங்கரையில் நடைபெற்று வருகிறது. காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த நிகழ்வு மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இரவு 9 மணியைத் தாண்டி 10 மணிநேரத்துக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யும் களைப்பின்றி தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், ஊக்கத்தொகையையும் வழங்கி வருகிறார். தற்போது வரை 1,150 மாண, மாணவிகளுக்கு அவர் சான்றிதழ் வழங்கியுள்ளார். மொத்தம் 1400 பேர் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு 11 மணி வரை நிகழ்வு தொடரலாம் என கூறப்படுகிறது.

நடிகர் விஜய் பேச்சு: “இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யக் காரணமே சமீபத்தில் நான் கேட்ட ஒரு படத்தின் வசனம் தான். ‘காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது’. அதுதான் அந்த வசனம். இது நூற்றுக்கு நூறு உண்மை மற்றும் யதார்த்தம்.

 

 

அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது கல்வி. அதற்கு எனது தரப்பில் ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினேன். அதற்கான நேரம் தான் இது. ஆசிரியர்கள், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளிக்குப் போவது, கல்லூரி போவது, பட்டம் பெறுவது மட்டும் முழுமையான கல்வி அல்ல என விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லியுள்ளார். அதைக் கற்று, அதையெல்லம் மறந்து பிறகு எது எஞ்சியுள்ளதோ அது தான் கல்வி என அவர் சொல்லியுள்ளார். முதலில் அது புரியவில்லை. அப்புறம் போகப் போக புரிந்தது. நாம் கற்கும் கல்வியை கடந்து நம்மிடம் எஞ்சி இருப்பது நமதும் குணமும், சிந்திக்கும் திறனும் தான். இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான் முழுமையான கல்வி அறிவை பெற முடியும்.

பணத்தை இழந்தால் அதில் இழப்பு ஏதும் இல்லை. ஆரோக்கியத்தை இழந்தால் ஏதோ ஒன்றை இழக்கிறோம். ஆனால், குணத்தை இழந்தால் அனைத்தையும் இழக்கிறோம். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இவ்வளவு நாள் வரை பெற்றோர் உடன் இருந்து வந்த நீங்கள், படிப்புக்காக வேறு இடத்திற்கு செல்ல வேண்டி இருக்கும். அந்த சுதந்திரத்தை கவனத்துடன் கையாள வேண்டும். நம்முடைய வாழ்க்கை நம் கையில தான் இருக்கிறது.

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் போலி செய்திகள் அதிகம் இருக்கின்றன. பரந்து விரிந்துள்ள சமூக வலைதளம் அதற்குக் காரணம். அதனால் சிந்திக்கும் திறன் நாம் கற்கும் கல்வியைக் கடந்தும் இருக்க வேண்டும். நிறைய படிங்க. அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிக்கலாம்” என்று விஜய் பேசினார்.