பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஆலோசனைக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் அனுப்பிய சுற்றறிக்கை:

அனைத்து விதமான பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை ஏற்படாதவாறு வளாகச்சூழலை உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஆலோசனைக் குழுக்கள் அமைக்க வேண்டும்.

அதில், பள்ளி முதல்வர், 2 ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் 2 பேர், பள்ளி நிர்வாகப் பிரதிநிதி, ஆசிரியரல்லாத பணியாளர் உள்ளிட்டோர் இடம்பெறவேண்டும். அக்குழு மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன், வளாகச் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும்.

பள்ளியின் முதல்வர் நிரந்தரஉறுப்பினராகவும், மற்றவர்கள் சுழற்சி முறையிலும் நியமிக்கப்பட வேண்டும். மேலும், 2 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் அந்தப் பணியில் தொடரக் கூடாது. உறுப்பினர்கள் குறித்த விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.