பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் இன்று (ஜன.27) காலை மலைக்கோயிலில் உள்ள தங்ககோபுரம், ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றியும், ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவியும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பழநியில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததால் நகரமே விழாக்கோலம் பூண்டது.
முருக்கப்பெருமானின் மூன்றாம்படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநியிலுள்ள மலைக்கோயிலில் முருகன் தண்டாயுதபாணியாக வீற்றிருந்து மக்களுக்கு காட்சியளிக்கிறார். ஞானப்பழம் குறித்து எழுந்த சர்ச்சையில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு முருகக் கடவுள் வந்து குடியேறிய இடம் என சிறப்பு பெற்றது பழநி மலை.
பழநி மலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு (2006) கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்ற நிலையில் பல முறை கும்பாபிஷேகம் நடத்த முயற்சித்தும் 2018 ம் ஆண்டு நடைபெறவேண்டிய கும்பாபிஷேகம் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தநிலையில், கடந்த ஓராண்டுக்கு மேலாக கும்பாபிஷேகம் பணிகள் நடைபெறத்துவங்கி கடந்தவாரம் முடிவுற்றது. இதையடுத்து இன்று(ஜன., 27) கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக யாகசாலை பூஜைகள், வேள்வி பூஜைகள் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து நடைபெற்றது. இன்று காலை எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து காலை 8.15 மணிமுதல் 9.15 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெற்றது
பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் ராஜகோபுரம், தங்ககோபுரம் மேல் உள்ள கலசங்களுக்கு மந்திரங்கள் முழுங்க புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் கோபுரங்கள் மீது மலர்கள் தூவப்பட்டது.
அமைச்சர்கள் சேகர்பாபு, அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ.,இ.பெ.செந்தில்குமார், கோயில் இணைஆணையர் நடராஜன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கும்பாபிஷேக விழாவை அமைச்சர்கள், எம்எல்ஏ இணைந்து பச்சைக் கொடியசைத்து கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்தனர்.
கும்பாபிஷேகத்தை மலைக்கோயிலில் இருந்து 6000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேரடியாக கண்டு கோபுரதரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் மெகா ஸ்கிரீன்களிலும் ஒளிபரப்பப்பட்டது. நேரலையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டனர்.
கும்பாபிஷேகத்தை காண மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்பட்ட ஆறாயிரம் பக்தர்கள் மலையில் இருந்து இறங்கியபிறகு, வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கும்பாபிஷேகத்தை காண அனுமதிச்சீட்டு கிடைக்காத பக்தர்கள் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு சுவாமிதரிசனம் செய்ய அதிக ஆர்வம் காட்டி மலைக்கோயிலுக்கு சென்றனர்.
கும்பாபிஷேக காட்சிகள் மலை அடிவாரம் பகுதியில் அகன்ற திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. இதனால் மலைக்கோயில் மட்டுமின்றி மலையடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்ட இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
கண்காணிப்பு பணியில் டிரோன் கேமிராக்களும் ஈடுபடுத்தப்பட்டது. பல்வேறு காரணங்களால் நாட்கள் தள்ளிப்போய்க் கொண்டிருந்த பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக நடைபெற்றதால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர்.