மும்பை: ஏற்கெனவே சரிவு கண்டு வரும் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் இன்று மேலும் சரிவு கண்டது. இதன் மூலம் எல்ஐசியின் சந்தை மூலதனம் பங்கு வெளியீட்டின் போது ரூ.6,00,242 கோடியாக இருந்த நிலையில் அது சரிவடைந்து இன்று ரூ.4.98 லட்சம் கோடியாக சரிந்தது. ஏறக்குறைய ஒரு மாதம் ஆகும் நிலையில் ரூ.1,02,242 கோடி அளவுக்கு சரிவடைந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பொதுபங்கு வெளியீடு மே 4-ம் தேதி தொடங்கி மே.9 தேதி வரை நடைபெற்றது. ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்பட்டது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்பட்டு பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன.

முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்ஐசி ஒரு பங்கு ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த விலையைக் காட்டிலும் 8 சதவீதம் விலை குறைந்தே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஒரு பங்கு ரூ.867 என்ற அளவில் முதல் நாளில் விற்பனைக்கு வந்தது. அதன் பிறகு தொடர்ந்து எல்ஐசி பங்குகள் சரிவு கண்டே வந்தது. வெளியீட்டு விலையை தொடரவில்லை.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 18 சதவீதம் சரிந்து ரூ.2,409 கோடியாக இருந்தது. இதனால் பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு பங்குக்கு 1.50 ரூபாய் ஈவுத்தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதன் பிறகு எல்ஐசி பங்குகள் மதிப்பு சரிவடைந்து வருகிறது. இந்தநிலையில் எல்ஐசி பங்குகள் இன்று பட்டியலிடப்பட்ட விலையில் இருந்து 15% குறைந்துள்ளது.

பட்டியலிடப்பட்டபோது, அதன் சந்தை மூலதனம் கிட்டத்தட்ட 8% சரிந்ததால் எல்ஐசி மதிப்பில் ரூ.46,500 கோடியை இழந்தது. அதன்பிறகு பங்குகள் மீளவில்லை.
எல்ஐசி பங்கு இன்று மேலும் சரிவடைந்து 779.30 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய விலை ஒப்பிடுகையில் 2.72 சதவீதம் குறைந்துள்ளது.

இதன் மூலம் சந்தை மூலதனத்தின் மதிப்பு முதல்முறையாக ரூ.5 லட்சம் கோடிக்கு கீழே குறைந்துள்ளது. எல்ஐசியின் சந்தை மூலதனம் இன்று ரூ.4.98 லட்சம் கோடியாக சரிந்தது. 949 வெளியீட்டு விலையில் எல்ஐசி சந்தை மூலதனம் ரூ.6,00,242 கோடியாக இருந்தது.LIC