அக்னிபாதை திட்டம் நாட்டின் முன்னேற்றத்துக்கும் இளைஞர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்’ என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
ராசிபுரம் அருகே மசக்காளிப்பட்டியில் பாஜக முன்னாள் ராணுவப் பிரிவு சார்பில் அக்னிபாதை திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த ஒரு வாரமாக நடக்கிறது. இப்பயிற்சி முகாமை பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை நேற்று பார்வையிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபாதை திட்டம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. விமானப்படைக்கு மட்டும் இதுவரை 7.50 லட்சம் விண்ணப்பங்களை இளைஞர்கள் அனுப்பியுள்ளனர்.
இத்திட்டம் நாட்டின் முன்னேற்றத்துக்கும் இளைஞர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என இளைஞர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இத்திட்டத்தில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னி வீரர்களாக 4 ஆண்டுகள் தேச சேவையாற்றுவர். அதற்குப் பிறகு 25 சதவீதம் பேர் தொடர்ந்து அப்பணியில் இருக்க முடியும். மீதமுள்ளவர்கள் சமுதாயப் பணி ஆற்ற முடியும். புதிய தொழில்கள் தொடங்கலாம். அதற்கான ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
அக்னி வீரர்களாக இருக்கும் போதே அவர்களுக்கு மேல்நிலைப் பள்ளி கல்வி, உயர்கல்வி, பட்டப்படிப்பு வாய்ப்புகள் வழங்கப்படும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு சிஆர்பிஎப், காவல்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம், மாவட்ட தலைவர் என்.பி. சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.