உத்தரப் பிரதேசம், நொய்டாவிலுள்ள ஒரு புகையிலை நிறுவனத்தில் ரூ.127 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக வணிக வரித்துறையின் 4 அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்துள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் கூடுதல் ஆணையர் தர்மேந்திரா சிங், இணை ஆணையர் தினேஷ் துபே, துணை ஆணையர் மிதிலேஷ் மிஸ்ரா மற்றும் உதவி ஆணையர் சோனியா ஸ்ரீவாத்ஸவா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் உ.பி. முதல்வர் யோகியால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை உ.பி. மாநில வணிக வரித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான சஞ்சீவ் மித்தல் உறுதி செய்துள்ளார். பணியிடை நீக்கமான இந்த நான்கு உயர் அதிகாரிகளும் நொய்டாவின் சிறப்பு ஆய்வுப் பிரிவில் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

நொய்டாவின் புகையிலை நிறுவனம் பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்து வருவதாக உ.பி. அரசுக்குக் கடந்த வருடம் ஜனவரி முதல் தொடர்ந்து புகார்கள் வரத் தொடங்கி இருந்தன. இதன் மீது ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி முதல்வர் யோகி வணிக வரித்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இப்பணி, வணிக வரித்துறையின் கூடுதல் ஆணையரான சி.பி.சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதில், ரூ.127 கோடி வரையிலான வரி ஏய்ப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து இந்தப் பணியிடைநீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் மூன்று அதிகாரிகளும் நொய்டாவில் பணியில் தொடர்ந்திருக்க, உதவி ஆணையரான மிதிலேஷ் மிஸ்ரா சஹரான்பூரில் பதவியில் இருந்தார்.