கடலூர், விழுப்புரம், தருமபுரி மாவட்டங்களுக்கான அதிமுக வேட்பாளர் முதல் பட்டியல் நேற்று வெளியானது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் வரும் பிப்.19-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த ஜன.28-ம்தேதி தொடங்கியுள்ளது.
அதிமுக சார்பில், இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் முடிக்கப்பட்டு, ஒரு வார்டுக்கு இருவர்கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு கட்சித் தலைமையிடம் வழங்கப்பட்டிருந்தது. கூட்டணி கட்சிகளில் பாஜகவுடன் இடப்பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுக தனது முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு வெளியிட்டுள்ளது.
அதன்படி, நேற்று கடலூர் மாநகராட்சி வார்டு உறுப்பினர், கடலூர் கிழக்கு, வடக்கு, மேற்கு, விழுப்புரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், கடலூர் மாநராட்சியில் போட்டியிடும் 45 வார்டுகளுக்கான வேட்பாளர்கள், கடலூர் கிழக்கில் சிதம்பரம் நகராட்சி – 33, கடலூர் வடக்கில் நெல்லிக்குப்பம் – 30, பண்ருட்டி – 33, கடலூர் மேற்கில் விருதாச்சலம் – 33, திட்டக்குடி- 24, விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகராட்சி- 42, திண்டிவனம்- 33, தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி- 32 ஆகிய 305 இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அமாவாசை
முதல்கட்ட பட்டியலை வெளியிட்டு, வேட்பாளர்களுக்கு ஏ படிவம், பி படிவம் ஆகியவற்றை அளித்து, அமாவாசை தினமான இன்று (ஜன.31) அவர்களைபிற்பகல் அல்லது நாளை காலைக்குள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வைக்க வேண்டும் என்று அதிமுக தலைமை முடிவெடுத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, இதர கூட்டணிக் கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.