தீபாவளியன்று சென்னையைப் பொருத்தவரை காலை 4 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 192-ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக களையிழந்து காணப்பட்ட தீபாவளி பண்டிகையை மக்கள் புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பட்டாசுகள் வெடிக்க தீபாவளி பண்டிகை நாளான அக்.24-ம் தேதியன்று காலை மற்றும் இரவு நேரங்களில் தலா ஒரு மணி நேரம் வீதம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பல்வேறு விதிமுறைகளும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையன்று நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் காற்று மாசுபாட்டின் தரக்குறியீடு கணிசமாக அதிகரித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை காலை 4 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 192-ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் இந்தியாவில் 170 நகரங்களில் காற்று மாசுபாட்டின் தரக்குறியீடு கணக்கிடப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் 9 இடங்கள் மற்றும் வேலூர், தூத்துக்குடி, ராமேஸ்வரம், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இந்த அளவு கணக்கிடப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொருத்தவரை, நேற்று காலை முதலே காற்று மாசின் அளவு சராசரியாக 150 என்ற அளவை கடந்தது. இந்நிலையில் இன்று காலை 4 மணி நிலவரப்படி, மணலியில் 221, ஆலந்தூரில் 218, வேளச்சேரி 203, கொடுங்கையூர் 187, அரும்பாக்கம் 212, ராயபுரம் 232, பெருங்குடி 280, எண்ணூர் 238 என்ற அளவுகளில் காற்று மாசுபாட்டு தரக்குறியீடு பதிவாகியுள்ளது.

காற்று மாசுபாடு தரக்குறியீடு 50 முதல் 100 என்ற அளவில் இருப்பது திருப்திகரமானது என்ற வகையிலும், 101 முதல் 200 வரை மிதமானது என்ர வகையிலும், 201 முதல் 300 வரை மோசமானது என்ற வகையிலும் வகைபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் 9 இடங்களில், காற்று மாசுபாடு தரக்குறியீடு அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், 8 இடங்களில் 201-300 வரை காற்று மாசுபாடு தரக்குறியீடு பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதேபோல், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது. மேலும், புதுச்சேரியில் 250 என்ற அளவிலும், திண்டுக்கல்லில் 145, தூத்துக்குடியில் 94, வேலூரில் 145 என்ற அளவுகளில் காற்று மாசுபாட்டின் அளவு பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரை, சாதரண நாட்களில் காற்று மாசுபாட்டின் அளவு 50 முதல் 100 என்ற திருப்திகரமான நிலையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.