தனது தம்பி இயக்கவுள்ள படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் இயக்குநர் மிஷ்கின்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மிஷ்கின். தற்போது ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் மிஷ்கின். இதன் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

எப்போதுமே புத்தகங்கள்தான் இவருடைய உலகம். மேலும், தான் இயக்கிய படத்தின் பாடல்கள் அனைத்திலுமே மிஷ்கினின் டச் புகுத்தப்பட்டிருக்கும். அதிகப்படியான ஈடுபாடு – தலையீடு காரணமாகவே இவருக்கும் இளையராஜாவுக்கும் இடையேயான நட்பு முறிந்ததாக தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, தனக்குள்ள இசை ஞானத்தை வைத்து இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார் மிஷ்கின். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தினை மிஷ்கினின் தம்பி ஜி.ஆர்.ஆதித்யா இயக்கவுள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில் தயாரிப்பாளர், நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.