அம்மா மினி கிளினிக்குகளை மூடியதன் மூலம் ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த திமுக அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் தற்காலிகமாகத் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டன என்றும் கடந்த ஆட்சியில் ஓராண்டுக்காக இந்த கிளினிக்குகள் திறக்கப்பட்டன என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த திமுக அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது.
ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த திமுக அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.