பாபர் ஆஸமுக்கு பந்துவீசிப் பயிற்சி எடுத்தது விராட் கோலிக்கு பந்துவீச உதவியாக இருந்தது என்று பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகீன் அப்ரிடி தெரிவித்தார்.

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, வி்க்கெட் இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கடந்த 1992ம் ஆண்டிலிருந்து இந்திய அணியை உலகக் கோப்பைப் போட்டியில் ஒருமுறைகூட வெல்லமுடியாமல் இருந்த பாகிஸ்தான் அணி முதல் முறையாக நேற்றைய ஆட்டத்தில் வென்று தனது தாகத்தை தீர்த்துக் கொண்டது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷாகீ்ன் அப்ரிடி 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி என 3 பெரிய விக்கெட்டுகளை சாய்த்து அப்ரிடிதான்.ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியதால் அப்ரிடிக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

போட்டி முடிந்தபின் அப்ரிடி அளித்த பேட்டியில் கூறியதாவது:

அணி வகுத்துக் கொடுத்த திட்டங்களை சரியாகச் செயல்படுத்தியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தவும் பின்னர் கடைசியில் டெத் ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்தவும் தி்ட்டமிட்டோம். ஆ

னால், எனக்கு பவர்ப்ளேயில் 3 ஓவர்கள் வீச முதல்முறையாக வாய்ப்புக் கிடைத்தது. எனக்கு இதுநாள்வரை பவர்ப்ளேயில் 2 ஓவர்களுக்கு மேல் கொடுத்தது இல்லை. ஆனால்,ஆடுகளத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆனதால், 3வது ஓவர் அளிக்கப்பட்டது.

என்னுடைய பெற்றோர் மற்றும் பாகிஸ்தான் மக்கள் ஆசியால்தான் சிறப்பாக விளையாட முடிந்தது. என்னுடைய செயல்பாட்டை நினைத்து பெருமைப்படுகிறேன். பாபர் ஆஸம், ரிஸ்வான் இருவரின் பேட்டிங்கும் பிரமாதமாக இருந்தது. அவர்களும் வெற்றிக்குரியவர்கள். இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து போட்டிகளுக்கு எடுத்துச் செல்வோம்.

நம்பர் ஒன் வீரர் விராட் கோலியை வீழ்த்த திட்மிட்டோம். இதற்காக முதல்நாளில் இருந்தே பாபர் ஆஸமுக்கு பந்துவீசி பயிற்சி எடுத்தேன். பாபர் ஆஸம் பேட்டிங்கிற்கும், விராட் கோலியின் பேட்டிங்கிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. பாபர் ஆஸமுக்கு வலைப்பயிற்சியில் எவ்வாறு பந்துவீசினேனோஅதை போட்டியில் செயல்படுத்தினேன்.

நான் வீசிய 3-வது ஓவரில் பந்து ஸ்விங் ஆகவில்லை, ஆனால், சரியான லைன் லென்த்தில், வீசி ஸ்லோ கட்டரை வீசினேன் விக்கெட் விழுந்தது. புதிய பந்தில் யார்கர் வீசுவது என்னுடையபலம் அதுபோலவை யார்கர்வீசி ரோஹித் சர்மாவை ஆட்டமிக்கச் செய்தேன். இது நாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டதுதான்.

இவ்வாறு அப்ரிடி தெரிவித்தார்.