மதுரை: மதுரை ஆயுதப் படை மைதானத்தில், கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா நடத்த தடை விதிக்க வேண்டும் என மதுரை ஆட்சியரிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகர் மாவட்ட பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு தலைவர் வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் இன்று அளித்த மனு: ”மதுரை ரிசர்வ்லைன் ஆயுதப்படை மைதானத்தில் ஜூலை 15-ல் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலக திறப்பு விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆயுதப் படை மைதானத்தில் கோயில், நூலகம், உடற்பயிற்சிக் கூடம், ஓடுதளம் ஆகியன உள்ளன. ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீஸ் உடற்தகுதி தேர்வுகள்தான் நடைபெறும்.

சுதந்திர தினம், குடியரசு தினங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு போலீஸ் அணிவகுப்பும் நடைபெறும். அப்போது வீர தீரச் செயல் புரிந்தவர்களுக்கும், சமூக சேவைகள் புரிந்தவர்களுக்கும் விருது வழங்கப்படும். இந்த மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலக திறப்பு விழா நடத்தினால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான திமுகவினர் மைதானத்தில் கூடுவர். இதனால் ஓடுதளம், உடற்பயிற்சி கூடம் சேதமடைய வாய்ப்புகள் உள்ளது.

மைதானத்தை சுற்றி போலீஸ் குடியிருப்புகள், கோயில்கள் உள்ளன. பல மாவட்டங்களில் இருந்து திமுகவினர் வருவதால் போலீஸ் குடும்பத்தினர் குறிப்பாக வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு சிரமம் ஏற்படும். எனவே, மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கலைஞர் நூலக திறப்பு விழா நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.