மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், ம.பி.யில் பாஜகவும் முன்னிலை வகிக்கின்றன.

நாட்டில் காலியாக உள்ள 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.

மத்தியபிரதேசத்தில் கந்த்வா, இமாச்சலபிரதேசத்தில் மாண்டி, யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதுபோல் அசாம் (5 தொகுதிகள்), மேற்கு வங்கம் (4), ம.பி., இமாச்சலபிரதேசம், மேகாலயா (தலா 3), பிஹார், கர்நாடகா, ராஜஸ்தான் (தலா 2), ஆந்திரா, ஹரியாணா, மகாராஷ்டிரா, மிசோரம், தெலங்கானா (தலா 1) என 13 மாநிலங்களில் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஐஎன்எல்டி (இந்திய தேசிய லோக் தளம்) தலைவர் அபே சவுதாலா, முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களில் இருவர் ஆவார். ஐஎன்எல்டி எம்எல்ஏ அபே சவுதாலா கடந்த ஜனவரியில் பதவி விலகியதால் இங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

அசாமின் 5 தொகுதிகளிலும் 73.38 சதவீத வாக்குகளும் மேற்கு வங்கத்தின் 4 தொகுதிகளிலும் சுமார் 71 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அஸ்ஸாமில் உள்ள 5 இடங்களில் பாஜக 2 இடங்களிலும், ஹரியாணாவில் இந்திய தேசிய லோக்தளம் ஓரிடத்திலும் , இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் 3 இடங்களில் 2 இடங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் 3 இடங்களிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது.

மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி 1 இடத்திலும், ராஜஸ்தானில் காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், தெலுங்கானாவில் பாஜக ஒரு இடத்திலும், மேற்கு வங்கத்தில் அனைத்து 4 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையிலும் உள்ளது.