சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் கரோனா பரவல் மூன்றாம் அலை அதிகரித்துவரும் பட்சத்தில் பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. தற்போது தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என நாடு முழுவதும் சிபிஎஸ்இ மாணவர்கள் வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். முன்னதாக, சிபிஎஸ்இ 2-வது பருவத் தேர்வு அட்டவணை குறித்து மாணவர்கள் கவலை தெரிவித்த நிலையில், கரோனா நிலைமை சீரடைந்தால் மட்டுமே 2ஆம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்தது.

இதனிடையேதான் கரோனா மூன்றாவது அலை கட்டுக்குள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் குறிப்பிட்டிருந்ததால், இந்த ஆண்டு சிபிஎஸ்இ இரண்டாம் பருவத் தேர்வை ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே சொல்லப்படுகிறது. இதனையடுத்தே தற்போது பல மாணவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என ட்விட்டரில் ஹேஷ்டேக் மூலம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

பல மாணவர்கள் கரோனா பரவல் தொடர்பான தங்களின் வாதத்தை முன்வைத்து #cancelboardpariksha, #CancelBoardExam2022, #BoardExam என்ற ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்துள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் தேர்வு வேண்டும் என்பதைத் தங்களின் கோரிக்கையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

மாணவர்களின் கோரிக்கை ஒருபுறம் இருக்க, 2-வது பருவத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை அதிகாரபூர்வ வலைதளமான cbseresults.nic.in இல் வெளியிட்டுள்ளது சிபிஎஸ்இ வாரியம். மொத்தம் 2 மாதிரித் தாள்களை இதுவரை வெளியிட்டுள்ளது.