ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை அடுத்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:.

கடந்த 2019-ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பிளாஸ்டிக் தடை தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்போது, பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த இந்தியா உறுதி அளித்தது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன்படி பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கோப்பைகள், பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் ஸ்பூன், பிளாஸ்டிக் அட்டைகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி, விநியோகம், விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை அடுத்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

வரும் செப்டம்பர் 30-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 50 மைக்ரானில் இருந்து 75 மைக்ரானாக அதிகரிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 120 மைக்ரானாக அதிகரிக்கப்பட உள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின்படி கழிவு மேலாண்மையை மாநில அரசுகள் திறம்பட செயல்படுத்தி வருகின்றன. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் நாடு முழுவதும் கழிவு மேலாண்மை மேலும் மேம்படும். புதிய நடைமுறைகளை அமல்படுத்த தேசிய அளவில் செயல் குழு அமைக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.