தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் சென்னையில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற 3 அலங்கார ஊர்திகள் மக்கள் பார்வைக்காக மெரினா கடற்கரையில் வரும் 23-ம் தேதி வரை காட்சிப்படுத்தப்படும்.
இந்திய விடுதலைப் போரில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் சென்னை குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் 3 அலங்கார ஊர்திகள் கலந்துகொண்டன. பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டன. அந்த வகையில், சென்னை மெரினா கடற்கரை சாலை விவேகானந்தர் இல்லம் அருகே இந்த ஊர்திகள் நேற்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மலர்தூவி, மரியாதை செலுத்தி பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் த.வேலு, இ.பரந்தாமன், ஏஎம்வி பிரபாகர்ராஜா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை விளக்கும் வகையில் குடியரசுத் தினத்தன்று 3 அலங்கார ஊர்திகள் தொடங்கி வைக்கப்பட்டு தமிழகத்தில் கடந்த 23 நாட்களாக 2,100 கி.மீ. பயணித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன.
முதல்வர் வழிகாட்டுதலின்படி சென்னை மெரினா கடற்கரையில் 3 இடங்களில் 3 அலங்கார ஊர்திகளும் நிறுத்தி வைக்கப்பட்டு, 20-ம் தேதி (நேற்று) முதல் 23-ம் தேதி வரை 4 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அலங்கார ஊர்திகளில், 1806-ம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற சிப்பாய் கலகம், ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, பெண்களின் விடுதலைக்காக போராடிய, பாடிய மகாகவி பாரதியார், அடக்குமுறையை எதிர்த்ததால் தண்டனை பெற்று வ.உ.சிதம்பரனார் செக்கிழுக்கும் காட்சி, நாட்டின் விடுதலைக்காக பேச்சாற்றல் மூலம் விழிப்புணர்வு ஊட்டிய சுப்பிரமணிய சிவா, சீர்திருத்தவாதி விஜயராகவாச்சாரி உள்ளிட்ட தலைவர்களின் வரலாற்று பங்களிப்புகள் தத்ரூபமாக விளக்கப்பட்டுள்ளன.
கள்ளுக்கடை மறியல் உள்ளிட்ட விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டு, சமூக சீர்திருத்தம், பெண் விடுதலைக்காகவும், தீண்டாமையை வேரறுக்கவும் பாடுபட்ட பெரியார், ஒத்துழையாமை இயக்கம், சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட மூதறிஞர் ராஜாஜி, விடுதலைப் போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கர்மவீரர் காமராஜர், தியாக சீலர் கக்கன், சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர் இரட்டைமலை சீனிவாசன், இளம் வயதிலேயே போராட்டத்துக்காக இன்னுயிரை மாய்த்துக்கொண்ட வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை உள்ளிட்டோரின் தியாகங்களை விளக்கும் வகையில் அவர்களது உருவங்கள் வரையப்பட்டுள்ளன. 3 அலங்கார ஊர்திகளும் தமிழர்களின் விடுதலை வேட்கையை பொதுமக்களுக்கு பறைசாற்றுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.