தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவலில், “வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், திருவண்ணாமலை, நாமக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும்.
அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோபிச்செட்டிப்பாளையம், ஈரோட்டில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.