‘இந்தி திணிப்பு’ மீண்டும் விவாதப் புயலை ஏற்படுத்திய சூழலில், ‘ழகரம்’ தாங்கிய தமிழணங்கை ட்விட்டரில் ட்வீட் செய்து இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
“இந்தியாவில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை அலுவல் மொழியாக ஏற்க வேண்டும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்த, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ‘இந்தி திணிப்பு’ விவகாரத்துக்கு எதிராக கொந்தளித்தனர். இந்தப் பின்புலத்தில், ரஹ்மானின் தமிழ்ப் பற்று பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.
திரைத்துறை மற்றும் இசை உலகில் கோலோச்சி வருபவர் தமிழரான ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருது மேடையில் விருதை பெற்றுக் கொண்டவுடன் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ எனத் தமிழில் பேசியவர். பல மொழிகளை சார்ந்தே இவரது பணி அமைந்திருந்தாலும், தமிழ் அவரது நெஞ்சில் குடிகொண்டுள்ளது என்பதை இது வெளிப்படுத்துகிறது. இருந்தாலும் இந்தி திணிப்பு குறித்து ரஹ்மான் எதுவும் அந்த ட்வீட்டில் நேரடியாகப் பதிவிடவில்லை. ஆனால், அவர் அதைப் பதிவு செய்த காலச் சூழல் முக்கியத்துவம் வாயந்தது.
என்ன நடந்தது?
“ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தியைதான் கருத வேண்டுமே தவிர, உள்ளூரில் பேசும் பிற மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி என்பது இல்லையென்றாலும் இந்திதான் அதிகாரபூர்வ மொழியாகும்” என டெல்லி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருந்தார்.
அப்போது முதலே இந்தி சாராத பிற மொழிகளை பேசி வரும் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ‘ழகரம்’ தாங்கிய தமிழணங்கை ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். சுமார் 50,000 பேர் அவரது ட்வீட்டை லைக் செய்துள்ளனர். 11,000 பேர் ரீ-ட்வீட்டும், 1,000-க்கும் மேற்பட்டோர் மேற்கோள் காட்டியும் அதனை ட்வீட் செய்துள்ளனர்.
ரஹ்மானின் ட்வீட்டுக்கு நெட்டிசன்களின் எதிர்வினை:
ஷிவானி: “இந்தி மொழி திணிப்பு என்பது கூடாது. இந்தி பேசும் இந்தியனாக இதைச் சொல்கிறேன்”.
சாம்: “ஒரு போதும் ரஹ்மானின் தமிழ்ப் பற்றை குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர் ரோஜா பட வாய்ப்புக்கு முன்னதாகவே ‘தமிழா.. தமிழா..’ பாடலை இயற்றியவர். ஆஸ்கர் மேடையில் தமிழில் முழங்கியவர்”.
சிவா: “பிறகு ஏன் நீங்கள் இந்தி மொழி படத்திற்கு அதிகமாக இசை அமைக்கிறீர்கள். இந்திய அளவில் பிரபலமடைய இந்தி மொழியை பயன்படுத்திக் கொண்டீர்கள். இந்தியை நேரடியாக எதிர்த்தால் வெளிப்படையாக உங்கள் குரலை எழுப்புங்கள்
ரவி: “சரியான நேரத்தில் அதற்கு ஏற்ற வகையில் தக்க ட்வீட்டை ட்வீட் செய்த சரியான நபர்”.
சந்திரமவுலி: “தமிழிலிருந்து அரபு மொழியில் தனது பெயரை மாற்றிக் கொண்டவர். ஆனால், இப்போது தமிழர் என தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்”.
இப்படியாக வரவேற்பு, எதிர்ப்பு என நெட்டிசன்கள் தங்களது எதிர்வினைகளை ரஹ்மானின் ட்வீட் மீது வெளிப்படுத்தியுள்ளனர்.