தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, திண்டுக்கல், குமரி, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை திருச்சியில் இன்று கனமழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், திருப்பூர், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுவை, காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், விழுப்புரம், மாவட்டங்களில் நாளை மழை பெய்யும். தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யக்கூடும். அக்.19, 20-ல் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, திருச்சி, மதுரையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அக்.21-ல் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது.
அரபிக்கடலில் கேரளா கடலோரப் பகுதி, மாலத்தீவு பகுதிகளில் பலத்த சூறாவளி விசக்கூடும். மணிக்கு 40- 50 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.