சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு நேற்று சைக்கிளில் வந்த டிஜிபி சைலேந்திரபாபு, திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு, நேற்று காலை சென்னையிலிருந்து, திருவள்ளூருக்கு சைக்கிளில் பயணம் செய்தார். அப்போது, அவர், திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் உள்ள தீயணைப்பு நிலைய வீரர்களை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் கோப்புகள் சரியாக உள்ளனவா? முதல் தகவல் அறிக்கை உரிய விதிமுறைகளின்படி பதியப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.
பின்னர், ஆய்வாளர் அறை, லாக்கப் அறை, ஆவணங்கள், ஆயுதங்கள் பாதுகாப்பு, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்த டிஜிபி, போலீஸாரின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பிறகு, போலீஸாரின் குடியிருப்பு பகுதிக்கு சென்று, அவர்களின் குடும்பத்தாரை சந்தித்து குறைகளை கேட்டறிந்த டிஜிபி, அங்கிருந்த சிறுவர்- சிறுமிகளை சந்தித்து, கலந்துரையாடி, `நீங்களும் ஐபிஎஸ் ஆகலாம்’ என்ற தான் எழுதிய புத்தகத்தை வழங்கினார்.
மேலும் அவர், போலீஸாரின் குழந்தைகளின் சிலம்பாட்டத்தை கண்டு மகிழ்ந்து, அவர்களுக்கு புத்தக பரிசுகளை அளித்தார்.
தொடர்ந்து, சைக்கிளில் பூண்டி ஏரிக்கு சென்று சுற்றிப்பார்த்த சைலேந்திரபாபு, நீர்வளத் துறை ஆய்வு மாளிகையில் காலை சிற்றுண்டி அருந்திவிட்டு, அங்கிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.
டிஜிபியின் இந்த ஆய்வின்போது ஏடி எஸ்பிக்கள் யேசுதாஸ், மீனாட்சி, டிஎஸ்பி சந்திரதாசன், ஆயுதப்படை டிஎஸ்பி பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.