சென்னை மாநகரப் பகுதியில் அபராதமின்றி தொழில் உரிமத்தைப் புதுப்பிக்க, வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் ரூ.1,500 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இதில் சொத்து வரிக்கு அடுத்தபடியாக குறிப்பிடத்தகுந்த அளவில் தொழில் உரிமம் புதுப்பித்தல் மூலம் வருவாய் கிடைக்கிறது. சென்னை மாநகராட்சியில் இதுவரை 73,665 பேர் தொழில் உரிமம் பெற்றுள்ளனர்.

வழக்கமாக தொழில் உரிமத்தை ஒவ்வொரு நிதியாண்டுக்குள் புதுப்பிக்க வேண்டும். ஏப்ரல் 1-ம் தேதிக்கு மேல் 30-ம் தேதிக்குள் புதுப்பிப்போருக்கு தொழில் உரிமக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக வசூலிக்கப்படும். மே 1-ம் தேதி முதல் புதுப்பிக்கப்படும் தொழில் உரிமங்களுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இந்த ஆண்டு மாநகராட்சி வருவாய் துறையினர் மார்ச் மாதம் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்ததால், பொரும்பாலானோரின் தொழில் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. அதனால் ஏப்ரல் 30-ம் தேதி வரை அபராதமின்றி தொழில் உரிமம் புதுப்பிக்க மாநகராட்சி அவகாசத்தை நீட்டித்திருந்தது.

ஏப்ரல் மாதத்திலும் கரோனா தடுப்பு பணிகளில் வருவாய்த் துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டதால், தொழில் உரிம புதுப்பிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. இதனிடையே, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உரிமம், தீயணைப்புத் துறை அனுமதி உள்ளிட்டவை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை செல்லும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் தொழில் உரிமத்தை அபராதமின்றி புதுப்பிப்பதற்கான அவகாசத்தை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே 45,859 உரிமங்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில், இந்த புதிய உத்தரவு மூலம், உரிமம் புதுப்பிக்காத 27,806 தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Metro_People #Chennai_Corporation #Chennai #NewsUpdates #Metro_People #TodayNews #business #license