கரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் டி20 ஆட்டம் செப்டம்பர் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கும் 2-ம் கட்ட லீக் ஆட்டம் அக்டோபர் 8-ம் தேதி ஆர்சிபி அணி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் நிறைவடைகிறது.

ஐபிஎல் அணிகளான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே அணி வீரர்களுக்கும், அலுவலர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கடந்த மே மாதம் 4-ம் தேதியோடு ஐபிஎல் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டது. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் மட்டுமே நடந்து முடிந்திருந்தன.

இந்நிலையில் 2-வது சுற்று லீக் ஆட்டங்களையும், சூப்பர் லீக் மற்றும் இறுதி ஆட்டத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. இதையடுத்து, அதற்கான போட்டி அட்டவணை மற்றும் தேதிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

ஐக்கியஅரபு அமீரகத்தில் 2-வது கட்ட ஐபிஎல் டி20 லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 27 நாட்கள் நடக்கும்போட்டித் தொடரில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரே நாளில் இரு ஆட்டங்கள் 7 முறை நடக்கின்றன. முதல் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கும் 2-வது ஆட்டம் இரவு 7மணிக்கும் நடக்கிறது.

துபாயில் தகுதிச்சுற்று(அக்.10) மற்றும் இறுதி ஆட்டம் உள்பட 13 ஆட்டங்களும், ஷார்ஜாவில் 10 ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணியின் தொடக்க ஆட்டம்(செப்.24), தகுதிச்சுற்று 2வது ஆட்டம்(அக்.11), மற்றும் எலிமினேட்டர்(அக்.13) சுற்றும் நடக்கிறது. அபுதாபியில் 8 ஆட்டங்கள் நடக்கின்றன.
அக்டோபர் 8ம்தேதி ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் லீக் ஆட்டங்கள் முடிகின்றன.

துபாயில் வரும் செப்டம்பர் 19-ம்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. அபுதாபியில் 20-ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன. 24-ம் தேதி ஷார்ஜாவில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது ஆர்சிபி அணி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சஎஸ்கே , ஆர்சிபி அணிகள் தலா 10 புள்ளிகளுடன் 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.

5-வது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ்(6புள்ளிகள்) அணியும், அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ்(6புள்ளிகள்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(4), சன்ரைசர்ஸ் அணி(2) உள்ளது.

IPL2021 #CSKvsMI #CSK #IPLSchedule #IPL2021 #schedule #IPL #NewsUpdates #Cricket #Mumbai_Indians