44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக இந்தியா முழுவதும் வலம்வந்த ஒலிம்பியாட் ஜோதி இன்று காலை மாமல்லபுரத்தை வந்தடைந்தது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஒலிம்பியாட் ஜோதி இந்தியா முழுவதும் உள்ள 75 நகரங்களைச் சுற்றி, இன்று காலை போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரத்தை வந்தடைந்தது.

செஸ் ஒலிம்பியாட் ஜோதியை தமிழக அமைச்சர்கள் மெய்யநாதன் மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் வரவேற்றனர். அகில இந்திய செஸ் கூட்டமைப்பினர் ஜோதியைப் பெற்றுக் கொண்டனர்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதியை கடந்த மாதம் 19-ம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை நினைவுகூறும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள 75 நகரங்களை இந்த ஜோதி சுற்றிவந்தது. கடந்த 23-ம் தேதி கோவை வந்த ஒலிம்பியாட் ஜோதி திருச்சி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வலம் வந்தது.

இன்று மாமல்லபுரம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மாமல்லபுரம் நுழைவு வாயில் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஒலிம்பியாட் ஜோதிக்கு மேளதாளங்கள் முழங்க பாரம்பரிய கலைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று மாலை சென்னை வந்தடையும் ஒலிம்பியாட் ஜோதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொள்கிறார். சென்னையில் இன்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடைபெறவுள்ளது. சென்னை மாநிலக் கல்லூரி மைதானத்தில் தொடங்கி, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை வழியாக பயணித்து நேரு விளையாட்டாரங்கத்தில் நிறைவடைகிறது.