இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம்தான் அதிக அளவு நஷ்டத்தில் இயங்கி வருவது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தற்போது 124 விமான நிலையங்கள் உள்ளன. இந்த விமான நிலையங்கள் 2021-22 ஆண்டில் ஈட்டிய வருவாய் மற்றும் லாபம், நஷ்டம் தொடர்பான தகவலை மாநிலங்களவையில் சிவில் விமான போக்குவரத்துறை இணை அமைச்சர் சமீபத்தில் அளித்துள்ளார். மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, 2021-22 ஆண்டில் இந்தியாவில் அதிக நஷ்டம் அடைந்த விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் முதல் இடத்தில் உள்ளது. 2021-22 நிதியாண்டில் சென்னை விமான நிலையம் 189.85 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் 278.63 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சென்னை விமான நிலையத்திற்கு 12,380 விமானங்கள் வந்து சென்றுள்ளது. இதில் 17 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், 2024-ம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கையை ஆண்டு ஒன்றுக்கு 5.5 கோடியாக உயர்த்தவும், ஒரு மணி நேரத்திற்கு 65 விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதைத் தவிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் நஷ்டத்தில்தான் இயங்கி வருகின்றன. கோவை விமான நிலையம் 28.51 கோடி ரூபாய், மதுரை விமான நிலையம் 41.20 கோடி ரூபாய், சேலம் விமான நிலையம் 5.61 கோடி ரூபாய், திருச்சி விமானம் நிலையம் 19.17 கோடி ரூபாய், தூத்துக்குடி விமான நிலையம் 13.97 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மேலும் புதுவை விமான நிலையமும் 12.36 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.