மதுரை அருகே பாப்பாபட்டியில் இன்று நடக்கும் கிராமசபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்கான பாதுகாப்புக்காக 1,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், பாப்பாபட்டியில் இன்று கிராமசபைக் கூட்டம்நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9.30 மணிக்கு தனி விமானத்தில் மதுரை வருகிறார்.
முதல்வருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து ரிங்ரோடு வழியாக காரில் செக்கானூரணி அருகே உள்ள பாப்பாபட்டி செல்கிறார். அங்கு காலை 10.30 மணியளவில் தொடங்கும் கிராமசபைக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்.
கிராம மக்களுடன் கலந்துரையாடல் நடத்தும் முதல்வர், கிராம வளர்ச்சிக்காக நிறைவேற்றப்படும் திட்டப்பணிகள் குறித்து பேசுகிறார். இதற்காக பாப்பாபட்டியில் மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பாப்பாபட்டி அருகே நாட்டார்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கச் செயல்பாடுகளை ஆய்வு செய்கிறார்.
திமுகவினர் வரவேற்பு
பகல் 12.30 மணியளவில் மதுரைமேலமாசி வீதியில் மகாத்மா காந்திஅடிகள் மேலாடை துறந்த கட்டிடத்தில் உள்ள காதி விற்பனை நிலையத்தைப் பார்வையிடுகிறார். முதல்வருடன் அமைச்சர் பி.மூர்த்தி, முதல்வரின் தனிச்செயலர் உதயச்சந்திரன், மதுரைஆட்சியர் அனீஷ்சேகர் உள்ளிட்டஉயர் அதிகாரிகள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். மதுரை மாநகர், புறநகர் மாவட்டதிமுகவினர் வரவேற்பு அளிக்கின்றனர்.
பலத்த பாதுகாப்பு
மதுரை மாநகர், புறநகர் போலீஸார் 1,500 பேர் ஈடுபட உள்ளனர். விமான நிலையத்தில் இருந்து பாப்பாபட்டி செல்லும் சாலை மற்றும் கிராம சபைக்கூட்டம் நடக்கும் பகுதியில் தென்மண்டல ஐஜி டி.எஸ்.அன்பு, மதுரை எஸ்பி பாஸ்கரன் தலைமையில் ஏராளமான போலீஸார்பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.
இந்நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிற்பகல் 1.30 மணியளவில் தனி விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.