தங்களது ஆட்சிக் காலத்தில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுவிட்டு தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்க அதிமுகவுக்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:
“கடந்த 2015ஆம் ஆண்டை விட தமிழகத்தில் நடப்பாண்டில் அதிக கனமழை பெய்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் தனது பேட்டியில், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் அளவு 2015இல் 518 மில்லி மீட்டராக இருந்தது. 2021இல் 613 மில்லி மீட்டராக உயர்ந்திருக்கிறது. அதேபோல, சென்னையில் 1,167 மில்லி மீட்டர், 1,121 மில்லி மீட்டராகப் பெய்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இதுவரை வடகிழக்குப் பருவமழை பெய்த காலத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த 59 குடும்பங்களுக்குத் தலா ரூபாய் 4 லட்சம் வீதம் ரூ.2.36 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கால்நடைகளுக்கு 2.84 கோடி ரூபாயும், சேதமடைந்த குடிசைகளுக்கு 1.17 கோடி ரூபாயும் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுத்துக் கண்காணித்திருந்தால் இந்த அளவிற்குக் கூட பாதிப்பு வந்திருக்காது. ஆனால், 2015 வெள்ளப் பெருக்கின்போது அதிமுக அரசின் அலட்சியப் போக்கு காரணமாக கடுமையான பாதிப்பை சென்னை மாநகரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதை இங்கு நினைவுகூர வேண்டும்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1இல் தொடங்கி டிசம்பர் 31 வரை பெய்யும் என்பதை அதிமுக ஆட்சியாளர்கள் அறியாத ஒன்றல்ல. 2015ஆம் ஆண்டில் நவம்பர் 1இல் தொடங்கி டிசம்பர் 2ஆம் தேதி வரை 32 நாட்களில் 1,333 மில்லி மீட்டர் மழை பெய்ததாகப் பதிவானது. இதில் நவம்பர் 1 முதல் 23 வரை 1,131 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அன்றைய தமிழக அரசிடம் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் நவம்பர் 17ஆம் தேதி ஒரே நேரத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் 18 ஆயிரம் கன அடி நீரும், டிசம்பர் 2 ஆம் தேதி 29 ஆயிரம் கன அடி நீரும் இரவு நேரங்களில் திறந்துவிடப்பட்டதால் ஆற்றங்கரையில் வாழ்ந்த அப்பாவி மக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதற்கும், உடமைகளை இழப்பதற்கும் அன்றைய முதல்வர் ஜெயலலிதாதான் பொறுப்பு என்று குற்றம் சாட்டப்பட்டது.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நிறைவேற்றிய தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சில ஆண்டுகள் கழித்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைக்கப்பட்ட மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் 2015 டிசம்பர் 2ஆம் தேதிக்கு முன்பு ஒருமுறை கூட கூடி விவாதிக்கவில்லை. பேரிடர் ஏற்படுவதற்கு முன்பு அதைத் தடுக்கிற வகையில்தான் ஒரு அரசு செயல்பட வேண்டுமே தவிர, பேரிடர் நிகழ்ந்த பிறகு நிவாரண உதவி செய்வது என்பது உண்மையான பேரிடர் மேலாண்மையாக இருக்க முடியாது.
கடந்த காலத்தில் 2004இல் சுனாமி, 2011இல் தானே புயல் போன்ற படிப்பினைகளின் அடிப்படையில் அன்றைய ஜெயலலிதா அரசு செயல்படாத காரணத்தால் 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு ஏற்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை மக்கள் இழந்துள்ளனர். அரசுக்கு இழப்பு என்பதை விட, இந்த வெள்ளப் பெருக்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்திருக்கிறார்கள். இது மக்களுக்கு எதிராக அன்றைய ஜெயலலிதா அரசு இழைத்த மிகப்பெரிய குற்றமாகும்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு மக்கள் பாதிப்பிற்குக் காரணமான அதிமுகவினர் இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையோ, தமிழக அரசையோ விமர்சனம் செய்வதற்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது.
கடந்த ஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வெள்ளப் பகுதிகளை ஒன்று ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிடுவார். இல்லையெனில் தமது சொகுசு வாகனத்தில் பயணம் செய்து தமது பாதம் தரையில் படாத அளவிற்கு பக்குவமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதை எவரும் மறந்திட இயலாது. இதன் மூலம் ஜெயலலிதாவின் மனிதாபிமானம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஆனால், இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடாத பகுதி எதுவுமே இல்லை என்று கூறுகிற அளவிற்கு அனைத்துப் பகுதிகளுக்கும் நேரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரைத் துடைக்கவும், ஆறுதல் கூறவும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருவதைப் பாராட்டுவதற்கு மனம் இல்லையென்றாலும், குற்றம், குறை கூறாமல் இருக்கலாம்.
ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக தலைவர்கள் கடுமையான விமர்சனத்தை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழக மக்களைப் பொறுத்தவரை எதை மறந்தாலும் 2015 வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்பை மறக்க மாட்டார்கள்.
எனவே, மக்கள் நலனில் அக்கறையோடு, பொறுப்புணர்ச்சியுடன் முழங்கால் அளவு தண்ணீர் இருக்கின்ற இடங்களிலும் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களோடு, மக்களாக அவர்களது துன்பத்திலும், துயரத்திலும் இரண்டறக் கலந்து செயல்படுகிற முதல்வரைப் பார்த்து தமிழகமே பாராட்டுகிறது, போற்றுகிறது. அரசியல் எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்காகப் பாடுபடுகிற தமிழக முதல்வருக்குப் பேரிடர்க் காலங்களில் உறுதுணையாக இருப்பது அரசியல் கட்சிகளின் கடமையாகும். அந்த வகையில் எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுகவிற்கும் இது பொருந்தும்”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.