முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அதிக சிகிச்சை முறைகளுடன் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான ஆணைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், செய்தியாளர்களுக்கான காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போது செயல்படுத்தப்படும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இந்தமாதம் முடிவடைகிறது. முன்னதாக, கடந்த 2021-22 ஆண்டுக்கானசுகாதாரத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, சென்னை எம்ஆர்சி நகரில் நேற்றுநடந்த நிகழ்ச்சியில், முதல்வரின்விரிவான காப்பீட்டுத் திட்டத்தை ஜன.11 (இன்று) முதல் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, அதற்கான ஆணையை பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

அத்துடன், முதல்வர் முன்னிலையில், தமிழக அரசுக்கும், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்துக்கு ரூ.1,248.29 கோடிநிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் 11 தொடர்சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனை முறைகள், 8 உயர் சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 1,090 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை கட்டணமின்றி, அங்கீகரிக்கப்பட்ட 714 அரசு மற்றும் 886 தனியார் மருத்துவமனைகள் என 1,600 மருத்துவமனைகளில் பெற்று பயன்பெறலாம். அத்துடன் 86 கூடுதல் சிகிச்சை முறைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1.37 கோடி குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெற முடியும்.

செய்தித் துறையில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள், பருவஇதழ் செய்தியாளர்கள் குடும்பங்களை ஆண்டு வருமான உச்ச வரம்பின்றி முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இணைக்கவும், இனி ஆண்டுதோறும் செய்தித்துறையிடம் இருந்து அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களின் பட்டியல்களை பெற்று திட்டத்தில் சேர்க்கவும் அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி 2020-21ல் புதுப்பிக்கப்பட்ட 1,414 செய்தியாளர்களின் குடும்பத்தினர் முதல்கட்டமாக பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதற்கான அடையாள அட்டைகளை முதல்வர் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.