காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்றிருந்தநிலையில் நேற்று இரவு தாயகம் திரும்பினார். டெல்லி திரும்பிய ராகுல் காந்தி, கோவா அரசியல் சூழல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக கடந்தமாதம் கடைசி வாரம் வெளிநாடு சென்றிருந்தார். எந்த நாட்டுக்குச் சென்றிருந்தார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியினர் தெரிவி்க்க மறுத்துவிட்டனர். தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு டெல்லி திரும்பினார்

கோவா, உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து அதற்கான பணிகளில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோதன்கர், சட்டப்பேரவைத் தலைவர் திகம்பர் காமத் ஆகியோர் ராகுல் காந்தி வருகைக்கு முன்பே டெல்லி அழைக்கப்பட்டிருந்தனர். ராகுல் காந்தி டெல்லி திரும்பியதும் இவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனையில் கூட்டணி குறித்து பேசப்பட்டிருக்கலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டில் இருந்தவாரே ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், கோவா தேர்தல் பொறுப்பாளர் ப.சிதம்பரம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, தேர்தலுக்கு தயாராகியது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

கோவா மாநிலத்தில் காங்கிரஸ்கட்சி, கோவா ஃார்வேர்ட் கட்சியுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறது, இது தவிர பிற கட்சிகளுடனும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர அனைவரும் வரலாம் என திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் சமீபத்தில் கோவாவில் அழைப்புவிடுத்திருந்தது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக வெளியான தகவலை காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் மறுத்துள்ளார்.

ஆனால், கோவாவைப் பொறுத்தவரை ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களிடையே எதிர்ப்புமனநிலை நிலவுவதால் அதை சாதகமாக்க திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி முயல்கின்றன.

, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி விரைவில் இதுபோன்று விரிவான ஆலோசனை கூட்டத்தை நடத்துவார் எனத் தெரிகிறது. காங்கிரஸ்கட்சியின் மத்தியக் குழு கூடி விரைவில் 5 மாநிலங்களுக்குமான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும்