அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் தொடர்ந்து கரோனா பரிசோதனை செய்யப்படும் என்றுசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதி 140-வது வார்டு ரெட்டிக்குப்பம் சாலை அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில் ரூ.13 லட்சம்மதிப்பில் சாலையோர பூங்கா அமைக்கும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 59 லட்சத்து 31,627 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. வரும் 12-ம் தேதி ஒரே நாளில் 10 ஆயிரம்முகாம்களில் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், கூடுதல் தடுப்பூசிகளை கேட்டு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன். தமிழகத்தில் பாதிப்பு அதிகம் உள்ள 9 மாவட்டங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்பட இருக்கிறது.

எந்தெந்த பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டதோ, அந்த பள்ளிகளுக்கு சீல் வைத்து, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்படுகிறது. பள்ளிகளில் கரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. ஆனாலும், அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கரோனா பரிசோதனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.