முறையாக உரிமம் பெற்று இயங்கும் மணல் குவாரிகளை, சட்டவிரோத குவாரிகள் எனக் கூறி தொடரப்பட்ட வழக்கை 50 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், பெரும்கடம்பனூர், இளம் கடம்பனூர் மற்றும் சிரங்குடி புலியூர் ஆகிய கிராமங்களில் நடக்கும் சட்டவிரோத மணல் கொள்ளைகளை தடுத்து நிறுத்த கோரி பெரும்கடம்பனூர் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அரசு பிளீடர் பி. முத்துக்குமார் ஆஜராகி, “அந்தப் பகுதியில் செயல்படும் மணல் குவாரிகள் அனைத்தும் உரிமம் பெற்று செயல்பட்டு வருவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், குவாரிகளை குத்தகைக்கு எடுத்துள்ளவர்களை மிரட்டும் வகையில், மனுதாரர் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார். மனுதாரருக்கு எதிராக சட்டவிரோத மணல் குவாரி நடத்தியது உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளதால் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

அப்போது மனுதாரர் தரப்பில், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மணல் குவாரிகள் அனைத்தும் முறையான உரிமம் பெற்று செயல்படுகிறது. சட்ட விரோதமாக எந்த குவாரிகளும் செயல்படவில்லை என்பதும் அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து தெரியவருகிறது. முறையாக விசாரிக்காமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி, மனுவை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த அபராத தொகையை 15 நாட்களுக்குள் மாநில சட்டபணிகள் ஆணைய குழுவில் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.