சென்னை:

கேற்கும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமைக் கழகம் சார்பில் 3 பக்க கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள 16 பொருள்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்: “11.07.2022 அன்று திருவள்ளூர் மாவட்டம், வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ள கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்பாணை:

23.06.2022 அன்று நடைபெற்ற கட்சிப் பொதுக்குழுவில், 2190 கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டுக் கோரியபடி, கட்சி செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 11.07.2022 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

01.12.2021 அன்று நடைபெற்ற கட்சி செயற்குழுவில் இயற்றப்பட்ட கட்சியின் சட்ட திட்டத் திருத்தங்கள், 23.06.2022 அன்று நடைபெற்ற கட்சிப் பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால், கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கட்சியின் சட்ட திட்ட விதி – 20 அ, பிரிவு 7-ன்படி, மேற்கண்ட நிலை உருவானதால், கட்சி ஒருங்கிணைப்பாளர், கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் நியமிக்கப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் கட்சிப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகிறோம்.

இந்நிலையில், கட்சிப் பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதி (1\5) எண்ணிக்கையினர், கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்தை, கட்சி சட்ட திட்ட விதி -19, பிரிவு 7-ன்படி உடனடியாக கூட்டுமாறு, 23.06.2022 அன்று நடைபெற்ற கட்சிப் பொதுக்குழுவில் விண்ணப்பித்ததின் அடிப்படையில் இந்தப் பொதுக்குழுவானது கூட்டப்படுகிறது.

இந்த பொதுக்குழுவில் தீர்மானிக்க வேண்டி பொறுண்மை விபரங்களை 2432 கட்சிப் பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, அதிமுக பொதுக்குழுக் கூட்டம் 11.07.2022 திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம், வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கட்சி அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டப்படுகிறது.

கட்சிப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடும், தங்களுக்கான அடையாள அட்டையோடும் தவறாமல் வருகை தந்து, உரிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், கண்டிப்பாக முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது”.

கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்தில், விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் பொறுண்மை விபரங்கள்

> கட்சி அமைப்புத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்.

> தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்.

> கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கட்சி பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெடுப்பது சம்பந்தமாக.

> கட்சி இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது தொடர்பாக விவாதித்து முடிவெடுப்பது சம்பந்தமாக.

> கட்சி இடைக்கால பொதுச் செயலாளரை, நடைபெற உள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல் சம்பந்தமாக.

> கட்சிப் பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்ய வேண்டுதல் சம்பந்தமாக.

> கட்சியின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டுதல் சம்பந்தமாக.

> மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியின் சாதனைகள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்ட அரசின் வரலாற்று வெற்றிகளும்.

> அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்யும், திமுக அரசுக்கு கண்டனம்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய, மக்கள் விரோத திமுக அரசுக்கு கண்டனம்.

> சட்டம், ஒழுங்கை பேணி காக்கத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.

> மேகதாது அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்.

> இலங்கைத் தமிழர் நலன் காக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தல்.

> அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசுக்கு வலியுறுத்தல்.

நெசவாளர்களின் துயர் துடைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தல்.

> தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கட்சியினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம்.

அரசின் கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம், வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கட்சி செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், கட்சி அமைப்பு ரீதியாக உள்ள அனைத்து மாவட்ட கட்சி அலுவலகங்களிலும் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னையிலும் காணொலிக் காட்சி (Video Conference) மூலம் கட்சி செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.