உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் மீது சீனா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதிலும் சீன சமூக வலைதளமான வெய்போவில் சீன நெட்டிசன்கள் எலான் மஸ்கை சரமாரியாக திட்டித்தீர்த்து வருகின்றனர்.
புகார் என்ன? – சீன விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மீது இரண்டு முறை ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மோதப் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா. விண்வெளி முகமையிலும் புகார் அளித்துள்ளது. உலக நாடுகள் விண்வெளியை அமைதியான முறையில் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தை செயல்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மன்றம், விண்வெளி விவகாரங்கள் அலுவலகத்தை அமைத்துள்ளது. இதன் அலுவலகம் ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் உள்ளது. இந்த அமைப்பு விண்வெளி கழிவை அகற்றுவது குறித்தும் உலக நாடுகளை வழிநடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த அமைப்பில் சீனா அளித்துள்ள புகாரில் ‘எலான் மஸ்கில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் ஸ்டார்லிங்க் நெட்வொர்க்கின் செயற்கைகோள்கள் கடந்த ஜூலை 1 மற்றும் அக்டோபர் 21 ஆகிய இரு தினங்களிலும் சீன விண்வெளி ஆய்வு மையம் மீது மோதவிருந்தது. சீன விண்வெளி ஆய்வு மையம் தனது தற்காப்புக் கருவி மூலம் நூலிழையில் தற்காத்துக் கொண்டது’ என்று கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்கு சீன விண்வெளி ஆய்வு மையம், கொலிஸன் அவாய்டன்ஸ் கன்ட்ரோல் (collision avoidance control) எனப்படும் மோதல் தடுப்புக் கருவியை இயக்க வேண்டியதாயிற்று என்று புகாரில் குறிப்பிட்டுள்ளது.
விளாசிய சீன நெட்டிசன்கள்: இது குறித்து ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் ஊடகங்களுக்கு விளக்கமளிக்க ஆரம்பத்தில் மறுத்துவிட்டது. பின்னர் சீனா இந்தப் புகாரை பொதுவெளியில் பகிரங்கமாக அம்பலப்படுத்தியது. இதனால் சமூக வலைதளங்களில் எலான் மஸ்க் மீது விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக சீன சமூக வலைதளமான வெய்போவில் எலான் மஸ்க் மீதும், அமெரிக்கா மீதும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
சீன நாட்டவர் ஒருவர் ‘எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைகோள்கள் அனைத்துமே விண்வெளி குப்பை’ என்று பதிவிட்டார். இன்னும் சிலர் ‘எலான் மஸ்க்கில் செயற்கைகோள்கள் அனைத்துமே அமெரிக்காவின் விண்வெளி போர் ஆயுதங்கள்’ என்று கடுமையாக விமர்சித்தார்.
‘எலான் மஸ்கின் ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு கொடுத்துள்ள அனுமதியால், அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது’ என்று சீன அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியான், ‘அமெரிக்க பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் நெட்வொர்க் மூலம் இதுவரை 1900 செயற்கைகோள்களை ஏவியுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கான செயற்கைகோள்களை ஏவத் தயாராக உள்ளது.
விண்வெளிக் கழிவுகளை அகற்றப்போவது யார்? – பூமியில் குவியும் கழிவுகளைப் பற்றி கருத்தரங்குகளும் மாநாடுகளும் நடைபெறுகின்றன. ஆனால் விஞ்ஞானிகளோ, விண்வெளியில் செயற்கைகோள்கள் மோதல்கள் நடைபெறாமல் இருக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். விண்வெளிக் கழிவுகள் பற்றி அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பூமியைச் சுற்றி சுமார் 30,000 செயற்கைகோள்களும், விண்வெளிக் கழிவுகளும் சுற்றிவருவதாகக் கூறப்படுகிறது.
விண்வெளிக் கழிவுகளின் அச்சுறுத்தலால் கடந்த வாரம் நாசா, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் வீரர்கள் மேற்கொள்ளவிருந்த விண்வெளி உலா நிகழ்ச்சியை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.