சர்தார் வல்லவாய் படேலின் 146-வது பிறந்தநாளைக்கொண்டாடும் இவ்வேளையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுதான் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 146-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. படேலின் பிறந்தநாளை தேசிய ஒற்றுமை நாளாக மத்தியஅரசு அறிவித்து அதைக் கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சர்தார் படேலுக்கு அஞ்சலி செலுத்தி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.அதில் “ இன்று ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் பலவீனமடைந்துவிட்டன. சர்தார் படேலின் பங்களிப்பை நாம் நினைவு கூற வேண்டும். இந்த தூண்களை உருவாக்கிய காங்கிரஸ் தலைவர்களில் சர்தார் படேல் முக்கியமான குரல் கொடுத்தவர். ஜனநாயகத்தை பாதுகாப்பதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி “ எனத் தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் விவசாயிகளின் உரிமைகளுக்காகவும, சுயமரியாதைக்காகவும், பர்தோலி சத்யாகிரஹத்தில் குரல் எழுப்பியவர். விவசாயிகள் ஒடுக்கப்படுவற்கு எதிராகவும், உரிமைகளைப் பெறுவும் நடத்தும் நீதிக்கான போராட்டத்தில் பாறை போன்று நிற்க சர்தார் படேலின் போராட்டம் நமக்கு ஊக்கமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்தப் போராட்டம் தேசத்தை ஒற்றுமையாக வைக்கத்தான். இந்தப் போராட்டம் வெறுப்பை வென்று அன்பை உறுதி செய்யத்தான். இந்த போராட்டம் நமது விவசாயிகளை, நமது மக்களை, நமதுதேசத்தை பாதுகாக்கத்தான். பாரத ரத்னா சர்தார் வல்லபாய் படேலை இன்றும், என்றென்றும் நினைவுகூர்வோம்” எனத் தெரிவித்துள்ளது.