குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது பஞ்சாபில் நிகழ்ந்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து குடியரசுத் தலைவர் கேட்டறிந்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக கடினமான முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் பஞ்சாபில் விரைவில் பேரவைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பஞ்சாப் சென்றார். அங்கு மாநில அரசு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.

இந்த சூழலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்றுசந்தித்துப் பேசினார். அப்போது பஞ்சாபில் நிகழ்ந்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து குடியரசுத் தலைவர் முழுமையாக கேட்டறிந்தார். பாதுகாப்பு குறைபாடு குறித்துஅவர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கவலை தெரிவித்தார்.

இதுகுறித்து பஞ்சாப் அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. இதனிடையே, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம்டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்கூறும்போது, “பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்த முழுமையான விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் சேகரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் கடினமான முடிவை எடுக்கும்” என்றார்.

அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் இதுபோன்ற தவறு நடைபெறாது. மத்திய உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தன.

பஞ்சாப் அரசு விசாரணை

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி நிருபர்களிடம் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிடப்பட்டிருந்தார். கடைசி நேரத்தில் அவர் காரில் பயணம் செய்துள்ளார். இது மாநில அரசுக்கு தெரியாது. பெரோஸ்பூர் மேம்பாலத்தில் சிலர் மட்டுமே போராட்டம் நடத்தியுள்ளனர். பிரதமரின் உயிருக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது. பிரதமர் பங்கேற்க இருந்த விழாவில் 700 பேர் மட்டுமே திரண்டிருந்தனர். இதன் காரணமாகவே அவர் பயணத்தை ரத்து செய்துள்ளார். தற்போது மாநில அரசு மீது பழி சுமத்துகின்றனர்” என்றார்.

இதுகுறித்து விசாரணை நடத்த பஞ்சாப் மாநில அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி மெஹதப் சிங் கில்தலைமையிலான இந்தக் குழுவில்முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 3 நாட்களில் அறிக்கை தாக்கல்செய்யுமாறு அக்குழுவிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே பஞ்சாப் பாஜக தலைவர்கள், மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சண்டிகரில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது மாநில உள்துறை அமைச்சர் சுக்விந்தர் சிங் ரந்தவாவை பதவி நீக்கம் செய்ய அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.- பிடிஐ