அதிமுகவில் மாநில பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர் என முக்கிய பதவிகளை பெற்ற திண்டுக்கல் மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் இனியாவது மாவட்டச் செயலாளர்கள் பதவியை விட்டுக் கொடுப்பார்களா என்று மூத்த நிர்வாகிகள் எதிர்பார்க் கின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிர்வாக வசதிக்காக கிழக்கு மாவட்டம், மேற்கு மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கிழக்கு மாவட்டச் செயலாளராக நத்தம் ஆர்.விசுவநாதன், மேற்கு மாவட்டச் செயலாளராக திண்டுக்கல் சி.சீனிவாசன் உள்ளனர். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். பிளவுக்கு முன்பு இருந்த அதிமுவில் திண்டுக்கல் சி.சீனிவாசன் வழிகாட்டுதல் குழு உறுப்பினர், அமைப்புச் செயலாளர் என மாநில அளவில் பொறுப்புகளை வகித்தார். இருப்பினும் உட்கட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளர் பதவியை விட்டுத்தரவில்லை. இதேபோல் நத்தம் ஆர்.விசுவநாதனும் மாநில அளவில் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தார். அப்போதும் மாவட்டச் செயலாளர் பதவியை விட்டுத்தர வில்லை.

தற்போது பழனிசாமி அணியில் திண்டுக்கல் சி.சீனிவாசனுக்கு மாநிலப் பொருளாளர் பதவியும், நத்தம் ஆர்.விசுவநாதனுக்கு மாநில துணைப் பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

2 முக்கியப் பதவிகளும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது தென்மாவட்டத்தைச் சேர்ந்த பல மூத்த நிர்வாகிகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்தமுறை ஏற்கெனவே வகித்த மாநில அளவிலான பதவிகளைவிட மதிப்புமிக்க பதவியை இருவரும் பெற்றுள்ளனர். இதனால் இருவரும் மாவட்டச் செயலாளர் பதவிகளை மூத்த நிர்வாகிகளுக்கு விட்டுத்தர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு திண்டுக்கல் மாவட்ட அதிமுகவினரிடம் ஏற்பட்டுள்ளது.