சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 110 வட்டாட்சியர்களுக்கு, துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற வழங்கிய ஆணையின்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 2004ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களில் பணிமூப்பில் உரிய திருத்தங்கள் செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசு ஆணைப்படி, தற்போது வட்டாட்சியர்களாகப் பணிபுரியும் 110 நபர்களுக்கு துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2022ம் அண்டு வரையிலான துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களுக்கான ஆணைகள் விரைவில் வழங்கப்படவுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.