கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையே 69 வார்டுகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் 50 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியைக் கைப்பற்ற திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அதிமுக 99 வார்டுகளிலும், திமுக 74 வார்டுகளிலும் போட்டி யிடுகின்றன.

அதிமுக ஒரு இடத்தைகூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. திமுக 26 வார்டுகளை தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு வழங்கியுள்ளது.

நடப்பாண்டு மறைமுகத் தேர்தல் மூலமாக மேயர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இதற்கு மாநகராட்சியில் பெரும்பான்மை வார்டுகளை கைப்பற்றுவது முக்கியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் வேட்பாளர்களை திட்டமிட்டு நிறுத்தியுள்ளன. 69 வார்டுகளில் திமுகவும், அதிமுகவும் நேருக்கு நேர் களம் காண்கின்றன.

இந்த வார்டுகளில் வெற்றி பெற இரு கட்சியினருமே தங்களுக்கு சாதகமான வகையில் தேர்தல் வியூகங்களை வகுத்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.