திண்டுக்கல்: “அதிமுக பிளவு குறித்த பேச்சுகள் எல்லாம் யாரோ திட்டமிட்டு பரப்புவதாகதான் நான் நினைக்கிறேன். இதனால், உடனடியாக பலனடையப்போவது தமிழகத்தில் திமுகதான். எனவே, இந்தப் பிண்ணனியில் திமுக இருப்பதாகதான் நான் நினைக்கிறேன்” என்று சசிகலா கூறியுள்ளார்.

அதிமுகவின் முதல் எம்.பி. மாயத்தேவர் உடல்நலக்குறைவு காரணமாக திண்டுக்கல்லில் நேற்று காலமானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, மாயத்தேவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” அதிமுக என்பது ஒரு தனிப்பட்ட நபருக்கானது அல்ல. கட்சியின் தலைவர் எம்ஜிஆர் கட்சியை ஆரம்பிக்கும்போதே ஏழைகளுக்கான கட்சிதான் என்றுதான் அன்றே கூறியிருக்கிறார். நானே இங்கு வந்து அஞ்சலி செலுத்தினேன். அதிமுகவால் இன்றைக்கு பெயரும், புகழும் பெற்றிருப்பவர்கள், இங்குவந்து பார்த்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

அதிமுகவைப் பொறுத்தவரை தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அந்த தொண்டர்கள் என்னுடன் உள்ளனர். அதுதான் உண்மையான முடிவு. அதை நோக்கிதான் இந்த இயக்கம் செல்லும். நிச்சயமாக 2024 தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்வேன். இதை அனைவரும் பாரக்கத்தான் போகிறீர்கள்.

அதிமுகவில் உள்ள அனைவரையும் ஒன்றிணைத்து செல்வதைத்தான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு நான் செய்யும் பெரிய கடமையாக கருதுகிறேன். அதை நிச்சயம் நான் செய்வேன்” என்றார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் மத்திய அரசின் அழுத்தம் உள்ளதா என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “40 ஆண்டுகளாக இந்த இயக்கத்தில் இருந்துள்ளேன். அனைத்து அரசியல் சூழ்நிலைகளையும் பார்த்துதான் வந்தேன். என்னைப் பொறுத்தவரை, இந்த மாதிரியான பேச்சுகள் எல்லாம் யாரோ திட்டமிட்டு பரப்புவதாகதான் நான் நினைக்கிறேன். இதனால், உடனடியாக பலனடையப்போவது தமிழகத்தில் திமுகதான். எனவே இந்தப் பிண்ணனியில் திமுக இருப்பதாகதான் நான் நினைக்கிறேன். அதிமுகவிலிருந்து யார் யார் பிரிந்து வெளியே உள்ளனரோ, அவர்களை கட்சியில் இணைப்பதுதான் எனது வேலை. அதை நல்லபடியாக செய்து முடித்து 2024-ல் மாபெரும் வெற்றியை கொண்டு வருவோம்” என்று அவர் கூறினார்.