உலகின் ஆகச்சிறந்த பவுலர்களைக் கொண்ட எங்களிடம் இங்கிலாந்தின் அதிரடி பேட்டிங் ‘பாஸ்பால்’ உத்தி பலிக்காது, பாஸ்பாலை முறியடித்து விட்டோம் என நடப்பு ஆஷஸ் தொடரின் முதல் 2 வெற்றிகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய நாட்டு ஊடகங்களின் குரல் ஓங்கியது.

ஆனால், இப்போது இதே தொடரின் ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட் போட்டியில் (4-வது போட்டி) இங்கிலாந்து ஓவருக்கு 5.49 என்ற ரன் ரேட்டில் முதல் இன்னிங்சில் 592 ரன்களைக் குவித்ததோடு ஆஸ்திரேலியாவின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஓர் அரிய இன்னிங்ஸ் வெற்றியை நோக்கிப் பயணித்து வருவதைக் கண்டு கலங்கிப் போய் ஆஸி. கேப்டன் கமின்ஸையும், ஆஸ்திரேலிய உத்தியையும் சாடி எழுதி வருகின்றன.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 592 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை எதிர்கொண்டுள்ளது. ‘இது பாஸ்பால் ஆட்டத்தின் ரத்த வெறி’ என்கிறார் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் எழுத்தாளர் வர்ணித்துள்ளார். ‘ஆஸ்திரேலியாவை மழை காப்பாற்றும் என்ற எண்ணத்திலும் மண் விழுந்தது, மழை வர வாய்ப்பில்லை’ என்று ஆஸ்திரேலிய ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனல் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி உள்நாட்டில் 1985-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஷஸ் டெஸ்ட் ஒன்றில் 500 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளது. கம்மின்ஸ் கேப்டன்சி தவறுகளின் விரும்பத் தகாத வரலாற்றின் பாதிப்புதான் இது என்று சாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள், இங்கிலாந்தின் டாப் 7 வீரர்களில் 6 பேர் அரைசதம் அல்லது அதற்கும் மேல் ரன் குவித்துள்ளனர் என சொல்லியுள்ளது. இதுவும் 1930-க்குப் பிறகு இப்போதுதான் நடந்துள்ளது. இதையும் கம்மின்ஸ் கேப்டன்சி தலையில் கொண்டு கொட்டுகின்றன ஆஸ்திரேலிய ஊடகங்கள்.

ஜானி பேர்ஸ்டோ 81 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். அதுவும் ஜேம்ஸ் ஆண்டர்சனுடம் கடைசி விக்கெட்டுக்காக 66 ரன்கள் சேர்க்கப்பட்ட கொடுமையைத்தான் தாங்க முடியாமல் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள், ஊடகங்கள் மிகக் கடுமையான முறையில் விமர்சித்துள்ளன. ஆம்! ஷார்ட் பிட்ச் உத்தியைக் கடைப்பிடிக்க அனைத்து பந்துகளையும் பேர்ஸ்டோ பவுண்டரிக்கு விரட்டினார். 4 சிக்சர்களை இதில் அவர் விளாசினார். ‘பார்க்க முடியவில்லை’ என்று ஆஸ்திரேலியாவின் ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்தியை வர்ணித்துள்ளார் விக்டோரியா அணியின் முன்னாள் கேப்டன் டேரன் பெரி.

இத்தகைய ஷார்ட் பிட்ச் பவுலிங்கைப் பார்ப்பவர்கள் பைத்தியக்காரர்கள் அன்றி வேறு யாராக இருக்க முடியும் என்று டேரன் பெரி சாடியுள்ளார். மேலும் ரிக்கி பாண்டிங், மார்க் வாஹ் போன்றோரும் கம்மின்ஸ் கள வியூகம் அமைக்கும் உத்திகளை கடுமையாகச் சாடியுள்ளனர்.

இங்கிலாந்து பேட்டிங் செய்ய தொடங்கியவுடன் டீப் கவர் வைத்துப் பவுலிங் போட்டார் கம்மின்ஸ். இது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அதே போல் ஸ்லிப் பீல்டர்களை நெருக்கமாக நிறுத்தாமல் தள்ளி தள்ளி இடைவெளி விட்டு நிறுத்தியதும், கிட்டத்தட்ட 30 யார்டு சர்க்கிள் அருகில் ஸ்லிப் பீல்டரை நிறுத்தியதும் சர்ச்சைக்குள்ளானது. குறிப்பாக கிராலி பேட் செய்த போது டீப் பேக்வர்ட் பாயிண்ட் நிறுத்தியது ஏன் என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர். மிட்செல் ஸ்டார்க் வீசுகிற பந்து மட்டையின் விளிம்பில் பட்டால் கேட்ச் எடுக்க அருகில் ஆளில்லை. 4வது ஸ்லிப், 5வது ஸ்லிப் நிலையிலும் டீப் பேக்வர்ட் பாயிண்ட் வைத்தும் பவுலிங் செய்கிறார்கள். இது என்னவென்று எனக்குப் புரியவில்லை என்கிறார் மார்க் வாஹ்.

ஹேசில்வுட் 27 ஓவர்களில் 126 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் 25 ஓவர்களில் 135 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், அனைத்திற்கும் மேலாக கம்மின்ஸ் 23 ஓவர்களில் 129 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் மற்றும் கைப்பற்றி இருந்தார். இது எதனால் என்றால் கம்மின்ஸின் மோசமான களவியூகத்தினால்தான் என்கிறார் ரிக்கி பாண்டிங்.

கிராலியை இருமுறை மிட்செல் மார்ஷ் வீழ்த்தியிருப்பதை கருத்தில் கொள்ளாமல், அவர் ரன்கள் எட்டும் வரும் வரை மார்ஷை பந்து வீச அழைக்கவேயில்லை என்பதும் கம்மின்ஸின் பெரிய தவறாகக் கண்டிக்கப்பட்டு வருகிறது.

இவையெல்லாம் சேர்ந்து கம்மின்ஸ் இந்த ஆஷஸ் தொடருக்குப் பிறகே கேப்டன்சி பொறுப்பை இழப்பார் என்றே ஆஸ்திரேலிய ஊடகங்கள் சொல்லி வருகின்றன.