“அதிமுக ஒன்றுபட்டு களத்திற்கு வரவில்லை என்றாலும், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவை நிராகரித்துவிட்டு தேர்தல் களத்திற்கு சென்றாலும் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினருக்கு கிடைக்காது” என்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு கூறியுள்ளார்.

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தலைவர் தனியரசு, ஓ.பன்னீர்செல்வத்தை புதன்கிழமையன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகளை இன்று சந்தித்துப் பேசினேன். பொதுவாக ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக அணி வலிமையாக சிதையாமல் அங்கு களத்தில் இருக்கிறது.

ஆனால், அதிமுக கூட்டணியிலும் ஒரு தடுமாற்றத்தை நாம் பார்க்கிறோம். அதிமுகவிலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனியாக வேட்பாளர்களை நிறுத்துவேன் எனக் கூறுவதால், ஒரு பெரிய பின்னடைவைச் சந்திப்பதற்கான சூழல் இருக்கிறது. எனவே, கொங்கு இளைஞர் பேரவை ஓபிஎஸ் தலைமையிலான அணிக்கு ஆதரவளிக்கிறது.

அண்ணன் ஓபிஎஸ்ஸை தவிர்த்துவிட்டு அல்லது நிராகரித்துவிட்டு, எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை வலிமை பெறச் செய்ய முடியாது. எனவே, ஒன்னரை கோடி அதிமுக தொண்டர்கள், தமிழக வாக்காளப் பெருமக்கள், எடப்பாடியின் இந்த எதேச்சதிகாரப் போக்கிற்கு, இந்த இடைத்தேர்தல் மூலமாக பதில் தருவார்கள். அவர் திருந்த வேண்டும் என்பதற்காக எடப்பாடியை அத்தொகுதி வாக்காளப் பெருமக்கல் நிராகரிப்பார்கள்.

அதிமுக ஒன்றுபட்டு களத்திற்கு வரவில்லை என்றாலும், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவை நிராகரித்துவிட்டு தேர்தல் களத்திற்கு சென்றாலும் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினருக்கு கிடைக்காது” என்று அவர் கூறினார்.