இசையமைப்பாளர் இளையராஜாவை சாதி ரீதியாக விமர்சித்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் அளிக்குமாறு, சென்னை காவல் ஆணையருக்கு தேசிய எஸ்.சி.,எஸ்.டி. ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஈரோட்டில் கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், இளையராஜாவை சாதி ரீதியில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் விமர்சித்துப் பேசியதாக புகார் எழுந்தது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.இதையடுத்து, இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம், சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இளங்கோவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.