இந்தியாவில் தீவிர வறுமை ஏறக்குறைய ஒழிக்கப்பட்டு விட்டதாகவும், 40 ஆண்டுகளில் நுகர்வு சமத்துவமின்மை குறைந்து வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு கரோனா தொற்றுநோய் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய காலத்திலும் தீவிர வறுமை அதிகரிக்காமல் அதேச அளவில் இருப்பதை உறுதி செய்வதில் உணவு ரேஷன்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி சுர்ஜித் எஸ் பல்லா, முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் விர்மானி மற்றும் பொருளாதார நிபுணர் கரன் பாசின் ஆகியோர் இந்தியாவில் வறுமை நிலை குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி அதன் அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த ஆய்வறிக்கையின் விவரங்கள் ஏப்ரல் 5-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அது தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:
இந்தியாவில் கடுமையான வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முந்தைய 2019 ஆம் ஆண்டில் இருந்த நிலையை விட உயரவில்லை. இந்தியாவில் வாங்கும் திறன் கொண்ட மக்கள் எண்ணிக்கையை பொறுத்தவரையில் வாங்கும் திறன் சமநிலையில் 1.9 அமெரிக்க டாலர் என்ற சர்வதேச அளவீட்டையொட்டி மக்கள் தொகையில் 0.8% என்ற அளவில் உள்ளது.
நுகர்வு வளர்ச்சியானது 2004-2011 இல் காணப்பட்ட வலுவான வளர்ச்சியை விட 2014-19 இல் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் உணவு மானியத் திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட சமூக பாதுகாப்பானது தொற்றுநோய் பாதிப்பின் பெரும் பகுதியை குறைத்து இருக்கிறது. கரோனா தொற்று காலத்தில் இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் பாராட்டப்பட வேண்டியது.
கரோனா காலத்தில் அதிகரிக்காத வறுமை
இந்தியாவின் உணவு மானியத் திட்டத்தின் விரிவாக்கத்தால் வழங்கப்பட்ட சமூக பாதுகாப்பு வலை பெருமளவு வறுமை ஒழிப்பில் முக்கி பங்காற்றியுள்ளது என்பது எங்கள் முடிவுகளில் நிரூபணமாகியுள்ளது. உணவு மானியம் கரோனா தொற்றுநோய் பாதிப்பின் பெரும்பகுதியை குறைத்துள்ளது. இத்தகைய பின்தங்கிய குறைந்த வறுமை விகிதங்கள் இந்தியா தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாக கூறலாம். மக்களின் வாங்கும் திறன் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மீண்டுள்ளது.
தொற்றுநோய்க்கு முந்தைய 2019 ஆம் ஆண்டில், தீவிர வறுமை 0.8 சதவீதமாக இருந்தது. தொற்றுநோய் பாதித்த 2020 ஆம் ஆண்டு உணவுப் பரிமாற்றங்கள் வறுமை தொடர்ந்து குறைந்த அளவில் இருப்பதை உறுதி செய்தது.
அரசு இலவசமாக அல்லது மானிய விலையில் வழங்கப்படும் பொருட்களால் குடும்பங்களின் நுகர்வுச் செலவு குறைந்துள்ளது. 1980-களின் முற்பகுதியில் இருந்தே இந்தியாவில் உணவு வகைப் விநியோக முறையில் நடைபெற்று வரும் மாற்றங்கள் சரியான இலக்கை கொண்டு செயல்படுகிறது. இது கடந்த இரண்டு ஆண்டுகளிலும் கூட நல்ல பலனை கொடுத்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.