கோவை விவசாயி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம், ஒட்டர்பாளையத்தை சேர்ந்த விவசாயி கோபால்சாமி. இவர் தனது பரம்பரை நிலத்தை, தனது குடும்பத்தார் ஒப்புதல் பெறாமல் வேறு ஒருவருக்கு பட்டா மாறுதல் செய்து கொடுத்தது தொடர்பாக விளக்கம் கேட்பதற்காக அதே ஊரிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு கிராம உதவியாளர் முத்துசாமியை தாக்கியதாகவும், காலில் விழ வைத்ததாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.

இந்நிலையில் கிராம உதவி யாளர், பட்டியல் இனத்தவர் என்பதால் தனது சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக கோபால்சாமி மீது போலீஸில் புகார் கொடுத் தார். இதைத்தொடர்ந்து கோபால் சாமி மீது வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் வெளியான முழு வீடியோவில் விவசாயிகுற்றமற்றவர் என தெரியவந் துள்ளது.

இந்நிலையில் அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்க மாநிலபொதுச்செயலர் டி.வேணு கோபால், “விவசாயி கோபால் சாமி குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்ட நிலையிலும், அவர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படவில்லை.தவறு செய்த கிராம நிர்வாக அதிகாரி, கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் மட்டும் செய்யப்பட்டுள்ளனர்” என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.