சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், முதல்கட்டமாக பரங்கிமலை-சென்ட்ரல், விமானநிலையம்-விம்கோநகர் ஆகிய 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோ நகர் வரை9 கி.மீ. தொலைவுக்கு முதல்கட்டநீட்டிப்புத் திட்டத்தில் பணி முடிந்து,ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு, 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. 2026-க்குள்திட்டப்பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கம் செய்யத்திட்டமிடப்பட்டது.

இந்த வழித்தடத்தில் பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலக்ஷ்மி நகர், திரு.வி.க.நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய12 மெட்ரோ நிலையங்களை அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்கு சில மாதங்களுக்கு முன் அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை தமிழக அரசிடம்இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சமூக சேவகர் தயானந்த கிருஷ்ணன், மெட்ரோ ரயில் பணிகள் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோரியிருந்தார். அதில், விமானநிலையம்-கிளாம்பாக்கம் திட்டப் பணி குறித்து மெட்ரோ ரயில்நிறுவனம் பதில் அளித்துள்ளது.

அதில், விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையே 12 நிலையங்கள் கட்டுவதற்கு ரூ.4,528 கோடி செலவாகும். இடத்துக்கு தக்கபடி தரைக்கு மேல் 7.5 மீட்டர் முதல் 12 மீட்டர் உயரம் வரை பாதை அமையும். தமிழக அரசின் ஒப்புதலுக்குப் பிறகுபணிகளைத் தொடங்கினால், 2026ஏப்ரலில் பணிகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தயானந்த கிருஷ்ணன் கூறும்போது, “தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள் ளது. கிளாம்பாக்கத்தில் பெரிய பேருந்து முனையம் வர உள்ளது.

எனவே, விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும். முதல்கட்ட விரிவாக்கத்தில் 20சதவீத நிதியை மத்திய அரசு அளித்துள்ளது. இரண்டாம் கட்ட திட்டத்தையும் மத்திய அரசின் நிதியுதவியுடன் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.