சென்னையில் ஐடி ஊழியராகப் பணியாற்றி வருகிறார் சசிகுமார். 5000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு புராஜெக்ட் சசிகுமாரின் பேச்சுத் திறமையால்(?) அவரது கம்பெனிக்குக் கிடைக்கிறது. அந்த புராஜெக்ட்டை மிகக் குறைந்த நாட்களில் வெற்றிகரமான முடிக்கவேண்டிய பொறுப்பும் சசிகுமாரின் தலையில் விடிகிறது.
ஊரில் 44 பேர் ஒன்றாகச் சேர்ந்து ஒரே வீட்டில் வசிக்கும் அக்மார்க் கூட்டுக் குடும்பம் சசிகுமாருடையது. நாத்தனார் சண்டை, மாமியார் மருமகள் சண்டை, சாப்பாட்டில் உப்பு இல்லாத சண்டை என எந்த சண்டையும் வராத அதிசயக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.
பலமுறை பெண் பார்த்தும் சசிகுமாருக்கு சரியான வரன் அமையவில்லை. கடைசியாகக் கிடைக்கும் ஒரு பெண்ணும் தான் வேறொருவரைக் காதலிப்பதாக சசிகுமாரிடம் கூற, அந்தப் பெண்ணின் பெயரைக் காப்பாற்றுவதற்காகத் தானே அந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்த திட்டமிடுகிறார் ஹீரோ. இதற்காக தன்னோடு பணியாற்றும் நிக்கி கல்ராணியை ஊருக்கு அழைத்துச் சென்று தனது காதலி என்று குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்துகிறார். இதன் பிறகு என்னவானது? குடும்பத்தினர் அவரை ஏற்றுக்கொண்டார்களா? அந்த 5000 கோடி ரூபாய் புராஜெக்ட்டை சசிகுமார் முடித்தாரா? என்பதே ‘ராஜவம்சம்’ படத்தின் கதை.
படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நாயகனான சசிகுமாரிடம் மிகப்பெரிய புராஜெக்ட் ஒப்படைக்கப்படுகிறது. அதற்காக வெறும் 30 நாட்களே ஒதுக்கப்பட்டிருப்பதாக உயரதிகாரி ஒருவர் சொல்ல அதிர்ச்சி அடையும் சசிகுமார், தொடர்ந்து ‘தோனி தெரியுமா?’ ‘அவரு எப்படி வேர்ல்டு கப் ஜெயிச்சாரு தெரியுமா?’ என்றெல்லாம் வசனம் பேசி, அனைவரும் 8 மணி நேரத்துக்கு பதில் இனி 16 மணி நேரம் வேலை செய்வோம் என்று சபமதமேற்கிறார். அடுத்த காட்சியில் அவர் தூங்காமல் கண்விழித்து இரவு பகலாக உழைத்து அந்த புராஜெக்ட்டை முடிப்பார் என்று எதிர்பார்த்தால் அடுத்த காட்சியிலேயே நிக்கி கல்ராணியை அழைத்துக் கொண்டு ஊரில் உள்ள தனது வீட்டுக்குச் செல்கிறார்.
சரி ஒருநாள் தான் இருக்கப் போகிறார் என்று பார்த்தால் மாதக்கணக்கில் அங்கேயே தங்கி நடிக்க வந்த பெண்ணைத் திருமணமும் செய்து கொள்கிறார். சும்மா இருந்தவரை நடிக்கக் கூட்டிவந்துவிட்டு திருமணமும் செய்துவிட்டு ஒயின் ஷாப்பில் குடித்துவிட்டு சோகமாகப் பாட்டு வேறு பாடுகிறார்.
படத்தின் இன்னும் புதுமையான பல காட்சிகளை இயக்குநர் வைத்துள்ளார். உதாரணமாக சசிகுமார், நிக்கி கல்ராணியை வீட்டுக்கு அழைத்து வரும் சமயத்தில் சசிகுமாரைப் பார்த்து ‘இப்படி பண்ணிட்டியே’ என்று ஆளாளுக்குக் கடிந்து கொள்கிறார்கள். பின்னர் சசிகுமாரின் அம்மா, நாயகியை நோக்கி கடுங்கோபத்துடன் நடந்து வருகிறார். என்ன நடக்கப் போகிறதோ என நாம் பதைபதைப்பில் இருக்கும்போது, திடீரென முகம் மலர்ந்து ‘இனி இதுதான் உன் வீடு’ என்கிறார். இப்படி ஒரு புதுமையான காட்சியை தமிழ் சினிமா வரலாற்றில் கண்டதுண்டா? இது ஒரு உதாரணம்தான். இதுபோன்ற காட்சிகள் படம் நெடுகிலும் வருகின்றன.
சசிகுமாரின் குடும்பத்தில் இருக்கும் ஆட்களை எண்ணி முடிக்கவே முதல் பாதி முடிந்து போகிறது. அதிலும் பாதி பேருக்கும் மேல் காமெடியன்கள். தம்பி ராமையா, யோகி பாபு, சாம்ஸ், சிங்கம் புலி, சதீஷ் என ஆளாளுக்கு காமெடி என்கிற பெயரில் கொலையாய்க் கொல்கிறார்கள். அதிலும் யோகி பாபு வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் அவர்கள் இதற்கு முன் நடித்த பிரபலமான படங்களின் கதாபாத்திரப் பெயர்களைச் சொல்லி அழைத்து பயங்கரமாக காமெடி செய்கிறார்.
ராதாரவி, விஜயகுமார், சுமித்ரா, ரேகா, ஜெயப்பிரகாஷ் என நல்ல நடிகர்களின் பட்டாளம், சாம் சி.எஸ்.இசை என ப்ளஸ்ஸாகி இருக்க வேண்டிய எந்த விஷயமும் படத்துக்குக் கைகொடுக்கவில்லை.
படத்தின் ஆரம்பத்தில் நாயகன் சசிகுமார் தொடங்கி சதீஷ், நிக்கி கல்ராணி உட்பட போவோர் வருவோரெல்லாம் புராஜெக்ட் புராஜெக்ட் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள் , நாயகன் அப்படி என்ன புராஜெக்ட் தான் செய்து கொண்டிருந்தார் என்பது கடைசி வரை தெரியவே இல்லை . ஒருவேளை மார்வெல் படங்களைப் போல க்ளைமாக்ஸ் முடிந்தபிறகு ஏதாவது ஒரு காட்சியை வைத்து விளக்குவார்களா என்று எதிர்பார்த்து அமர்ந்தும் ஏமாற்றமே மிஞ்சியது.
தமிழின் எவர்க்ரீன் சினிமாவான ‘சுப்ரமணியபுரம்’ கொடுத்த சசிகுமாருக்கு நாயகனாக ஓரிரண்டு படங்களைத் தவிர்த்து தொடர்ந்து இதுபோன்ற படங்களே அமைந்து கொண்டிருப்பது சோகம். சினிமா நுணுக்கங்களைக் கற்ற அவருக்கு படத்தின் கதையைக் கேட்கும்போதே தெரியவேண்டாமா? அதன் பிறகும் தொடர்ந்து இதுபோன்றே நடித்துக் கொண்டிருப்பது அவரது ரசிகர்ளுக்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது.
இணையத்தில் ‘கிரிஞ்சு’ என்ற சொற்பதம் இன்று அதிகமாகப் புழக்கத்தில் உள்ளது. சமூக வலைதளங்களில் அது சரியான அர்த்தத்துடன் புழங்கப்படுகிறதா இல்லையா என்ற விவாதத்துக்குள் நாம் செல்லவில்லை. ஆனால், அந்தப் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு அக்மார்க் ‘கிரிஞ்சு’ திருவிழாவாக வந்திருக்கிறது இந்த ‘ராஜவம்சம்’.