திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் லால் சலாம் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்க வந்துள்ள நடிகர் ரஜினிகாந்த், திருவண்ணாமலை அருகே உள்ள பிரபல தனியார் கல்லூரியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடியில் உள்ள தனியார் இடத்தில் லால் சலாம் படப்பிடிப்பு நேற்று பிற்பகலில் நடைபெற்றது. அப்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையறிந்த ரசிகர்கள் படப்பிடிப்பு நடைபெறும் பகுதி முன்பு திரண்டனர். அவர்களை கூட்டம் கூட வேண்டாம் என கூறி தனியார் பாதுகாவலர்கள் திருப்பி அனுப்பினர்.திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறும் படப்பிடிப்புக்காக, திருவண்ணாமலையில் ரஜினிகாந்த் 3 நாட்கள் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்புக்கு இடையே, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்யலாம் என கூறப்படுகிறது.